தாய்மார்கள் பாலூட்டும் அறையா..? தாய்மார்கள் அறையா..? திடீர் பெயர் மாற்றத்தால் குழப்பம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்துநிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை தார்மார்கள் அறை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திடீர் பெயர் மாற்றத்தால் மற்ற பெண்கள் படுத்து உறங்கும் நிலை  -பாலூட்டும் தாய்மார்களுக்கு அசவுகரியம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்ப்டடுள்ளது. 

தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கு வசதியாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, தமிழகம் முழுவதும் உள்ள  352 பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் 2 இடங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு அறை முழுமையாக பயன்பாட்டில் உள்ளது. மற்றொரு அறை பூட்டிய நிலையில் இருக்கிறது. 

இந்நிலையில், செயல்பாட்டில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையின் பெயர் திடீரென தாய்மார்கள் அறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பாலூட்டும் தாய்மார்கள் மட்டும் அந்த அறையை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது தாய்மார்கள் அறை என பெயர் மாற்றம் செய்துள்ளதால் மற்ற பெண்களும் அந்த அறைக்குள் சென்று படுத்து உறங்கும் நிலை காணப்படுகிறது. 
இதனால் பாலூட்டும் தாய்மார்களுக்கு அசவுகரியம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. மேலும், மது அருந்திவிட்டு சில ஆண்களும் அந்த அறை முன்பு படுத்திருப்பதால் தாய்மார்கள் அந்த அறைக்குள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
பெயர் மாற்றம் குறித்து நகராட்சி அலுவலகத்தில் கேட்டால் தங்களுக்கு எதுவும் தெரியாது, சுகாதாரத் துறை தான் பெயரை மாற்றியுள்ளதாக கூறுகின்றனர். 

இது தொடர்பாக சுகாதாரத் துறையிடம் கேட்டபோது, தாய்மார்கள் பாலூட்டும் அறை பிங்க் கலரில் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியதால் அந்த அறை பிங்க் கலரில் டிஜிட்டல் பிளக்ஸ் ஒட்டப்பட்டுள்ளதாகவும், மேலும் அது தாய்மார்கள் பாலூட்டும் அறை தான், அந்த டிஜிட்டல் பேனரில் அதற்கான சிம்பல் இடம்பெற்றிருப்பதாக கூறுகின்றனர். ஆனால், அந்த டிஜிட்டல் பிளக்சில், குழந்தைக்கு தாய் பாலூட்டும் போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தாலும், தாய்மார்கள் அறை என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெரிதாக எழுதப்பட்டிருப்பதால் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 
எனவே, வழக்கம் போல, தாய்மார்கள் பாலூட்டும் அறை என்ற வாசகத்துடன் இருக்க வேண்டும் என்பது, தாய்மார்களின் கோரிக்கையாகும் 

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”