சென்னை: தமிழ்நாடு முதல்வர் நீட் தேர்வுக்கு எதிரானவர் என்றால் மாணவர்கள் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகவும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழ்நாட்டிலும் பல்வேறு மாணவர் அமைப்புகள் அமைதியான ஜனநாயக வழியில் போராட்டங்களை நடத்த முன்வந்துள்ளன. ஆனால், இந்த அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்து அப்புறப்படுத்தியிருப்பதும், சில இடங்களில் கல்லூரி வளாகங்களுக்குள்ளேயே நுழைந்து மாணவர் இயக்க நிர்வாகிகளை அழைத்து எச்சரித்திருப்பதும் கவலைக்குரிய செய்தியாகும்.
நீட் தேர்வின் கொடூரமான விளைவாக உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் கூறியவரும், நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தவரும்தான் தற்போதைய தமிழ்நாடு முதல்வர். அந்த நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைத்து மக்களின் ஆதரவைப் பெற்றவர், இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, அதே நீட் தேர்வுக்கு எதிராக ஜனநாயக வழியில் குரல் கொடுக்கும் மாணவர்கள் காவல்துறை நடவடிக்கைகளுக்கு உள்ளாவது பெரும் முரண்பாடாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் மாணவர் போராட்டங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படவில்லை; அனுமதியின்றி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களையே காவல்துறை தடுத்துள்ளது என்று அமைச்சர்கள் விளக்கம் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் மறுபுறம், மாணவர்கள் தங்களை வலுக்கட்டாயமாக காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றதாகவும், போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று மிரட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த முரண்பட்ட தகவல்கள் அரசின் உண்மையான நிலைப்பாடு குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக, மாணவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டவுடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது தேவையற்ற நடவடிக்கையாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உண்மையிலேயே உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டுமெனில், அமைதியான ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி அளித்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துவதும், அமைதியான முறையில் போராடுவதும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையைப் பாதுகாப்பதே ஜனநாயக அரசின் கடமையாகும். எனவே, தமிழ்நாடு அரசு நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான முறையில் போராட விரும்பும் மாணவர்களுக்கு உரிய அனுமதியையும் முழுமையான காவல் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.