சென்னை: 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கான நிதி பங்கு 69% குறைக்கப்பட்டுள்ளது வேதனைக்குரியது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் மு.ஹி. ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார், அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழைகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்கும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவது மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது.
தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு 2023-24 ஆம் ஆண்டில் ₹12,698 கோடியாக இருந்தது. அது 2024-25 இல் ₹10,156 கோடியாகவும், 2025-26 இல் ₹5,878 கோடியாகவும் குறைக்கப்பட்ட நிலையில், 2026-27 ஆம் ஆண்டிற்கு வெறும் ₹3,923 கோடியாக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பங்கு சுமார் 69% குறைக்கப்பட்டுள்ளது.
125 நாட்கள் வேலை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்த ஒன்றிய அரசு, அதற்கேற்ற நிதியை வழங்காமல் இருப்பது மிகப் பெரிய முரண்பாடாகும். நாடு முழுவதும் ₹95,692 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு வெறும் 4.09% மட்டுமே வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத பாகுபாடாகும்.
தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் கோடிக்கணக்கான கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பெரும்பான்மையாக பெண்களே பணிபுரிகின்றனர். இந்த நிதி வெட்டு, குடும்பத்தை தாங்கி நிற்கும் இலட்சக்கணக்கான கிராமப்புற பெண்களின் வருமானத்தையே நேரடியாக பாதிக்கும்.
125 நாட்கள் வேலை வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த ஒன்றிய அரசு, இன்று 100 நாட்கள் வேலைக்கே தேவையான நிதியை வெட்டுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். “கிராமப்புற வளர்ச்சி” மற்றும் “விவசாயிகள் நலன்” குறித்து பேசும் ஒன்றிய அரசு, நடைமுறையில் தமிழ்நாட்டின் உரிமையான நிதியை வெட்டுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரான செயலாகும்.
தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டை உடனடியாக மறுபரிசீலனை செய்து, மாநிலத்தின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் நியாயமான பங்கை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு அரசும் இந்த அநீதிக்கு எதிராக வலுவாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன் உரிய நிதியை பெறுவதற்கு உறுதியான அழுத்தத்தை தர வேண்டும்

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.