சென்னை: தனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். மேலும், அவர் ஆளுநர் உரையில் புதிதாக எந்த திட்டங்களும் இடம்பெறவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இரவில் மின்தடை அதிகரித்துள்ளது.
ஃப்யூஸ் கேரியர் திருடு போனதாக பல்வேறு சாக்கு போக்குகளை கூறினார்கள். ஃபியூஸ் கேரியரை பிடுங்கிச் சென்றால் தமிழ்நாடு முழுவதும் எப்படி மின்வெட்டு ஏற்படும்?. முன்னர் அணில் ஓடியதால் மின்தடை ஏற்பட்டதாக திமுக சொன்னது. தற்போது இவர்கள் இதைச் சொல்கிறார்கள். தேவையான மின்சாரத்தை கொள்முதல் செய்து, தடையற்ற மின்சாரத்தை வழங்க வேண்டும்.
ஆளுநர் உரையில் புதிதாக எந்தத் திட்டங்களும் இடம் பெற வில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பெண்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என வீர வசனம் பேசினார்கள். தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
போதைப் பொருள் விற்பனை முன்பைவிட அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை. தவெக ஆட்சி அமைந்த பிறகு 38 நாட்களில், 150 போக்சோ வழக்குகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 126 வழக்குகள் என மொத்தம் 276 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 130 கொலைகளும் நடந்துள்ளன. விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
கர்நாடகா அரசிடம் முறையாகப் பேசி முயற்சி செய்திருந்தால் குறுவை சாகுபடிக்கு நீரை பெற்று இருக்கலாம். ஆனால், இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக சிரமப்படுகிறார்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500 கொடுப்போம், முதியோர் உதவித்தொகை ரூ.3000 ஆக உயர்த்தப்படும், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்தனர். தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமாக பேசி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கம் தான் தவெக.
திமுக ஆட்சியில் எவ்வளவு கடன் இருந்தது என்பது குறித்து தேர்தலுக்கு முன்னரே தவெகவுக்கு தெரியும். இதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் வாக்குறுதிகளை அளித்தார்கள். தற்போது இவைகளை சரி செய்த பிறகு தான், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் எனக் கூறுகிறார்கள். வெள்ளை அறிக்கையின் மூலம், அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது எனத் தெரிவிக்கின்றனர். இன்றைய ஆளுநர் உரை என்பது ‘கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்’.
எனது மகன் மிதுன் அரசியலுக்கு வருவது குறித்து தொலைக்காட்சிகளில் பல்வேறு விவாதங்கள் வருகிறது. அது தவறு. அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக மட்டும்தான் உள்ளார். கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகிறேன்.
எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறேன். ஊடகங்கள் அவதூறு செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அதிமுக தலைமை சரியாக இருந்ததால்தான் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார் என்பதை மறந்துவிடக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.