சென்னை: ஆறு மாதத்திற்கு உள்ளேயே பேசக்கூடிய சூழல் வந்துவிடுமோ என்ற அச்சம் வந்துவிட்டதாக பலர் பேசிக் கொண்டிருப்பதாகவும்,  ஆறு மாதமல்ல மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியுடன் ஆட்சி நடப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

விசிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கடந்த மே.24 ஆம் தேதி விசிகவிலிருந்து விலகிய நிலையில் தன்னுடைய ஆதரவாளர்கள் நூற்றுக் கணக்கனோருடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 

2021 சட்டப்பேரவை தேர்தலில் செய்யூர் சட்டமன்ற தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பனையூர் பாபு.  2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பல இடங்களில் முரணாக முடிவெடுப்பதாகவும் மாற்றி மாற்றி பேசி வருவதாகவும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து கட்சியில் இருந்து வெளியே வந்தார்.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மேடையில் பேசிய பனையூர் பாபு, விசிக சட்டமன்ற உறுப்பினராக தான் என்னை பலருக்கு தெரியும். ஆனால் எனக்கு தாய் வீடு திமுக தான். திமுகவில் ஏற்கனவே கட்சி பணியாற்றி உள்ளேன். தலைமை ஆணையிட்ட பணிகளை செய்துள்ளேன். செய்யூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது நான் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் தாய் உள்ளத்தோடு நிறைவேற்றி கொடுத்தவர் தலைவர் ஸ்டாலின். செய்யூர் தொகுதியில் பட்டியிலானத்தவர்கள் 12 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. 

அறிவுசார் மையங்கள் கொண்டு வரப்பட்டது. 800 ஏக்கரில் சிப்காட் அறிவிக்கப்பட்டது. அது இந்த ஆட்சியில் என்ன ஆகப்போகிறது என தெரியவில்லை. தலித் மக்களுக்கு தவெக அரசு தான் உறுதுணையாக இருக்கும் என்பதை போன்ற பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். தலித் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது மட்டுமல்லாமல் தமிழ்நாடு இன்று சமூக நீதி மண்ணாக இருக்கிறது என்றால் அதற்கு ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு தான் காரணம்.  ஒரு கவர்ச்சியை வைத்து ஏதேதோ கட்டமைக்கிறார்கள். 

இந்த அரசு என்ன மாதிரி என மக்கள் உணர்ந்து விட்டார்கள்.மக்கள் புலம்பும் அரசாக இது உள்ளது. விவசாயிகள் புலம்புகிறார்கள், பெண்கள் புலம்புகிறார்கள், மின்வெட்டு ஆகியவற்றால் மக்கள் புலம்புகிறார்கள், என்றார். 

தொடர்ந்து மேடையில் பேசிய திமுக தலைவர், தலைவர் என்ற முறையில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  கடந்த ஐந்து வருடமாக நான் சட்டமன்றத்தில் அவரை தொடர்ந்து கவர்ந்து கவனித்தது உண்டு. சட்டமன்றத்திற்கு அமைதியாக வந்து அமைதியாகச் செல்வார் பனையூர் பாபு. ஆனால் சட்டமன்றத்தில் பேசும் போது ஆக்கபூர்வமான கருத்துக்களை தன்னுடைய தொகுதிக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அங்கே வலியுறுத்தி பேசக்கூடியவர்.

அரசியல் மாறுபாடுகளை வேறுபாடுகளையும் விளக்கத்தோடு சுட்டிக்காட்டி ஏற்கனவே அறிக்கையாக வெளியேற்றி இருந்தார். நானும் படித்தேன். அதில் கூட யாரையும் புண்படுத்தக்கூடிய வார்த்தைகள் ஏதுமில்லை. கொண்ட கொள்கைக்காக உறுதியோடு பணி செய்யக்கூடியவர் தான் செயல்வீரர் பனையூர் பாபு. பரமக்குடியில் சாதி மறுப்பு போராளி இமானுவேல் சேகரனுருக்கு மணிமண்டபம் வைத்தது திமுக தான். தாத்தா ரெட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் அமைத்து தந்தோம். நந்தனத்தில் எம்.சி ராஜா மாணவர் விடுதியை புதுப்பித்து கட்டினோம். அதை பார்க்கும்போது நமக்கே பெருமையாக இருப்பதாக தெரிவித்தார்.

செய்யூர் தொகுதிக்கு திமுக அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியது. செய்யூரில் கலை அறிவியல் கல்லூரி, புதிய சிப்காட் தொழிற்சாலை, அரசு மருத்துவமனை, 28 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலைபின்னும் கூடங்கள், கடல் அரிப்பை தடுக்க தடுப்புச் சுவர்கள், பத்தாயிரம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் இப்படி பல்வேறு சாதனைகள் அந்த தொகுதியில் நாங்கள் செய்தோம். அவரது கொள்கையில் பயணத்தை தொடர சரியான இயக்கம் திமுக தான் என நினைத்து அவர் ஏன் இணைந்திருக்கிறார்.. அவரையும் அவரோடு வந்திருக்கும் அனைவரையும் இந்த இயக்கத்தின் தலைவனாக மட்டுமல்ல,  தலைமை தொண்டனாக வருக வருக என வரவேற்கிறேன். 

திமுகவை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்கும்போது, வேலை அதிகமாக இருக்கும்,  அப்படிப்பட்ட நேரத்தில் உழைப்பதற்கு தயாராக நாங்கள் இருக்கிறோம், நாங்கள் உங்களுக்கு துணை நிற்கிறோம் என இன்று துணையாக வந்து சேர்ந்திருக்கக்கூடிய  உங்களை வரவேற்கிறேன். நீங்கள் ஏற்கனவே பயணித்த இயக்கத்தை பற்றி விமர்சிக்க தேவையில்லை, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் இருக்கும் என்று அண்ணா சொல்லி இருக்கிறார். யாரையும் குறைத்து மதிப்பிட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை, என்றார்

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்று நான் சொல்ல வேண்டிய தேவை இல்லை. இந்த ஆட்சி பொறுப்பேற்ற போதே சொல்லி இருக்கிறோம் ஆறு மாதத்திற்கு விமர்சிக்க மட்டும் என்று, ஆனால் ஆறு மாதத்திற்கு உள்ளேயே பேசக்கூடிய சூழல் வந்துவிடுமோ என்ற அச்சம் வந்துவிட்டது, பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆறு மாதம் அல்ல ஐந்து மாதம் அல்ல மூணு மாசமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடு இந்த ஆட்சி நடப்பதாக தெரிவித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பனையூர் பாபு பேசியதாவது, தேர்தலில் போட்டியிடாததால் விசிக விருந்து வெளிவரவில்லை, தவெகவிற்கு திருமாவளவன் எதற்காகக் ஆதரவு கொடுத்தார் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். தவெக ஆதரவு குறித்து என்னிடம் எதுவும் பேசவில்லை. ஊடகத்தினரை சந்திக்கும் பொழுது, விஜய் மேல் சந்தேகம் இருக்கிறது என திருமா கூறியுள்ளார். விசிகவிற்கும் எழுச்சி தமிழருக்கும் என் பங்கு மிக அளப்பரியது.

வெளிச்சம் தொலைக்காட்சியின் உரிமையாளர் நான்தான். என்னுடைய முழு பணத்தில் தான் தொலைக்காட்சி ஆரம்பித்தேன். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் வெளிச்சம் தொலைக்காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் திருமாவளவனுக்காக தொடங்கப்பட்ட வெளிச்சம் தொலைக்காட்சி அவருக்காகவே தொடர்ந்து செயல்படும் என்றார்.

Related

“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள நிலைப்பாடு: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!”