திண்டுக்கல்: அண்டை மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும் என தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் சின்னச்சாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு குவாரி தொழில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அரசிடம் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின் சங்கத்தின் மாநில தலைவர் சின்னச்சாமிசெய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கு தமிழக அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
இதனால் எல்லையோர மாவட்டங்களில் உள்ள குவாரி உரிமையாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கோடி ரூபாய் முதலீடு செய்து, வங்கிகளில் கடன் பெற்று தொழில் செய்து வரும் நிலையில், இந்தத் திடீர் தடையால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும், உரிமையாளர்கள் கடனை அடைக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
எனவே, சட்டத்திற்கு உட்பட்டு அண்டை மாநிலங்களுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்ய அரசு மீண்டும் அனுமதிக்க வேண்டும். கல்குவாரி தொழிலை மேம்படுத்தும் வகையிலும், உரிமம் பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் வகையிலும் 'ஒற்றைச்சாளர முறையில்' (Single Window System) டிஜிட்டல் வழியில் உரிமங்களை வழங்கும் திட்டத்தை அரசு தீவிரமாக முன்னெடுத்து வருவதை சங்கம் வரவேற்கிறது.
இதன் மூலம் இத்தொழிலில் உள்ள குறைகள் களையப்படும். மேலும், குவாரிகளில் எந்த வகையான கனிமங்கள் கிடைத்தாலும், அதற்கான சீக்னரேஜ் (Seigniorage) மற்றும் வரிகளைச் செலுத்திவிட்டு அதனை வெட்டியெடுக்க அனுமதி வழங்கும் புதிய அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இது நாட்டுக்கும், தொழிலுக்கும் நன்மையளிக்கும். இந்த நடவடிக்கைகளுக்காக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கு சங்கம் சார்பில் நன்றிகள்.
40 முதல் 50 ஆண்டுகளாக முறையான அனுமதி பெற்று இயங்கி வந்த பல குவாரிகள், போலி சமூக ஆர்வலர்களின் தூண்டுதலாலும், தேர்தல் நேரத்து அழுத்தங்களாலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 11 குவாரிகள் (கடந்த 3 மாதங்களாக), கோயம்புத்தூரில் 6 குவாரிகள் (கடந்த 20 நாட்களாக) மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 17 குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு இதனை விரைந்து ஆய்வு செய்து, தவறுகள் ஏதேனும் இருப்பின் நிபந்தனைகளுடன் மீண்டும் குவாரிகளை இயங்க அனுமதிக்க வேண்டும்.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு (சாலைகள், பாலங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள்) குவாரி தொழில் மிக அவசியம் ஆனதாகும்.
ஆனால், கடந்த 4, 5 ஆண்டுகளாக "போலி சமூக ஆர்வலர்கள்" மற்றும் "போலி விவசாய சங்கத்தினர்" இத்தொழிலை ஒரு கடத்தல் தொழில் போலவும், மோசமான தொழில் போலவும் சித்தரித்து மக்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் தவறான பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர்.
இத்தகைய போலி நபர்களை அடையாளம் கண்டு அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் தான் எம்.சாண்ட் பயன்பாடு அரசால் ஊக்குவிக்கப்படுகிறது.
ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் ஆறுகளில் மணல் அள்ளுவது தடை செய்யப்பட்டு, மாற்று வழிகளில் தான் கட்டுமானங்கள் நடக்கின்றன. எம்.சாண்ட் தயாரிப்பில் கலப்படம் செய்ய முடியாது. அரசு மற்றும் பொதுப்பணித்துறை (PWD) விதித்துள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தியே தரமான எம்.சாண்ட் தயாரிக்கப்படுகிறது. யாராவது தரமற்ற முறையில் தயாரித்தால் அவர்கள் மீது அரசு தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்.
கனிமங்களுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்துள்ளது. அரசு நிர்ணயித்த விலையான எம்.சாண்ட் ரூ.5000, ஜல்லி ரூ.4000, பி.சாண்ட் ரூ.6000 என்ற விலையை விட, சந்தையில் உள்ள போட்டியின் காரணமாக குவாரி உரிமையாளர்கள் குறைவான விலையிலேயே பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
விலையை உயர்த்தி விற்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை.முன்பெல்லாம் குவாரி உரிமம் புதுப்பிக்க 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும் நிலை இருந்தது.
ஆனால், தற்போதுள்ள ஆட்சியின் நடவடிக்கைகளால் 3 முதல் 4 மாதங்களிலேயே சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவை கிடைத்து விடுகின்றன.
தொழில்துறையின் கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து, குவாரி தொழிலை மேலும் மேம்படுத்த உதவ வேண்டும் என தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.