திண்டுக்கல்: மதுபான கடைகளை தனியார் மயமாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயர் தீர்வை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்:- திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக 'சிலிங்' முறையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார் குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை "ஒருமுறை கைது செய்யப்பட்டால் பிணையில் (Bail) வெளியே வந்துவிட்டு மீண்டும் அதே தவறைச் செய்துவிடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம்.

சட்டவிரோதமாக விற்கப்படும் மது பாட்டில்களில் உள்ள 'க்யூ.ஆர் கோடு' (QR Code) ஸ்கேன் செய்யப்பட்டு, அந்த பாட்டில் எந்த டாஸ்மாக் கடையில் இருந்து, எந்த டிப்போவில் இருந்து விற்பனையானது என்பது வரை துல்லியமாகக் கண்டறியப்படும்." இந்த முறைகேட்டில் ஈடுபடும் சில்லறை விற்பனையாளர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு மதுபானங்களை விநியோகம் செய்த டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரை அனைவரும் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப் படுவார்கள்.

திண்டுக்கல்லுக்கு வருகை தந்தவுடனேயே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , டாஸ்மாக் மூத்த மண்டல மேலாளர் மற்றும் மாவட்ட மேலாளர் ஆகியோருடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தனது துறை சார்ந்த எந்தவொரு இடத்திலும் தவறு நடக்கக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறேன். "ரெஸ்டோபார்" திறப்பது மற்றும் மதுபான கடையை தனியார் மயமாக்குவது குறித்த கேள்விக்கு, ​ 234-வது முறையாக இதற்குப் பதில் சொல்கிறேன், கேளுங்கள். அந்த 'ரெஸ்டோ பார்' என்பது ஒரு விவாத அளவில் மட்டுமே இருந்து வருகிறது. 

​தனியார்மயத்தை விவாதிக்கிறீர்களா என்றால், ஆமாம். நாங்கள் இந்தத் துறையைச் சரி செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம். ஆனால், மக்கள் வேண்டாம் என்று சொல்லும் எந்தவொரு விஷயத்தையும் இந்த அரசு செய்யாது. ​இந்தத் துறையை முதலமைச்சர் என்னிடம் ஒப்படைக்கும்போது, "இந்தத் துறையில் நிறைய கசிவுகள் இருக்கின்றன. இது கொஞ்ச, நஞ்ச பணம் இல்லை. இந்தப் பணம் அரசுக்கு வர வேண்டியதில் இருந்தும், நுகர்வோரிடமிருந்து 10 ரூபாய், 5 ரூபாய் என்ற பெயரிலும் நிறைய பணம் போய்விட்டது. அதனால் இதையெல்லாம் தடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

 தொழிலாளர்களை ‘அவன், இவன்’ என ஒருமையில் பேசியதற்கு சி.ஐ.டி.யு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு ​எனக்கும் என் ஊழியர்களுக்கும் இடையேயான பேச்சு அது. அந்த வீடியோவை முழுமையாகப் பார்த்தால், பேசிய நபரும் 6வது நிமிடத்தில் 'இவன் எவ்வளவு கஷ்டப்படுறான் தெரியுமா' என்று பேசியிருப்பார். இது ஒரு அண்ணன்-தம்பிக்கு இடையே உரிமையோடு பேசும் பேச்சு. இருப்பினும், அது யாராவது மனதைப் புண்படுத்தியிருந்தால் வருத்தம்தான், ஆனால் அப்படிப் பேசுவது என் நோக்கம் கிடையாது. நீங்கள் எல்லாவற்றையும் அரசியலாகவே பார்க்கிறீர்கள்.

​எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் தான் போராட்டம் நடப்பதாகக் கூறுவதை தவறு என்று தொழிற்சங்கங்கள் மறுக்கிறது குறித்த கேள்விக்கு, ​உண்மையைச் சொன்னால், முதலமைச்சரின் வழியில் இந்தத் துறையில் யாரையும் ஒரு ரூபாய் கூட திருட விடமாட்டோம். ஊழியர்களின் பின்னால் நின்றுகொண்டு, அவர்கள் முகமூடியைப் போட்டுக்கொண்டு நீங்கள் என்ன போராட்டம் நடத்தினாலும், உங்களை ஒரு ரூபாய் கூட திருட விடமாட்டோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சி.ஐ.டி.யு டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, CITU பொது செயலாளர் அண்ணனை கூப்பிட்டு நானே தனிப்பட்ட முறையில் பேசி, சூழல் எல்லாம் சொல்லி, புரிய வச்சு நல்ல ஒரு முடிவுக்கு வருவோம்." "அரிசி விலை இப்போது ₹40-லிருந்து ₹50 ஆக உயர்ந்திருக்கிறது. காவிரி தண்ணீரைத் தர முடியாது என்று கர்நாடக அரசு கூறிவருகிறது. இந்த நிலையில், மதுவிலக்குத் துறை அமைச்சர் படம் பார்த்துவிட்டு அழுது நாடகமாடுகிறார் என்று பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளது குறித்த கேள்விக்கு,

​"நான் அமைச்சராக இல்லாமலேயே ஒன்று சொல்கிறேன். இதற்காக இன்னொருவரை உதாரணம் காட்டினால் அது நன்றாக இருக்காது. இது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஒரு உணர்வு சார்ந்த விஷயம். 30 வருடங்களாக, சிறு வயதிலிருந்தே முதலமைச்சர் விஜய் படம் பார்த்து வளர்ந்தவர்கள். இங்குமே எத்தனையோ பேர் அவர் ரசிகர்களாக இருப்பார்கள். 

இன்று உண்மையிலேயே நான் அமைச்சர் தான்; அமைச்சராகி இரண்டு மாதங்கள் ஆகின்றன. கடைசியாக அந்தப் படத்தைப் பார்த்தபோது எங்களுக்குள் எழுந்த உணர்வு என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் ஒருமுறையாவது திரையில் பார்த்து ரசித்த ஒரு முகம் அவர். எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தைத்தன்மை இருக்கும் அல்லவா? எல்லோருக்குள்ளும் ஒரு ரசிகன் இருப்பான் அல்லவா? அப்படி நான் ரசித்தது என் தலைவர்.

​நான் இப்போதும் சொல்கிறேன், தளபதி எங்களுக்கு என்றுமே தளபதிதான். எனக்கு அறிமுகமானபோது திரையில் பார்த்து பழகிய முகம் அவர். இனிமேல் அவர் திரையில் வரமாட்டார் என்று நினைக்கும்போது எழுந்த உணர்ச்சி அது. ​ஆனால், அதை எப்படி வீடியோ எடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்னை அறியாமல் இயல்பாக வந்த கண்ணீர்தான் அது. இப்படி அறியாமல் வந்த ஒரு விஷயத்தை ஒரு பெரிய விவாதப் பொருளாக்குவதில் என்ன பிரயோஜனம் இருக்கப் போகிறது? சரி, இதைப்பற்றி மேலும் விவாதிக்க வேண்டாம்." என்றார்.

Related

“ ஜூலை 28 ல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 33-வது பட்டமளிப்பு விழா ”