தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா ஒன்னப்பகவுண்டனஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட மாக்கனூர் கிராமத்தில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா ஒன்னப்பகவுண்டனஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட மாக்கனூர் கிராமத்தில் சுமார் 500-க்கு‌ம் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு அனைத்து வீடுகளுக்கும் ஜெல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. 

இங்கு, அரசு நடுநிலைப்பள்ளி அருகே, 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இதில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பஞ்சாயத்து ஏரியிலிருந்து நீர் நிரப்பி அங்கு உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய குடிநீர் இன்றி வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 4 குடங்கள் மட்டுமே தண்ணீர் வருகின்றது. 

மற்ற 2 மினி குடிநீர் தேக்கத் தொட்டிகள் முற்றிலும் பயன்பாட்டில் இல்லை. இப்பகுதியில் குடிநீர் சீராக வழங்காததால் 2 நாட்களுக்கு காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் மட்டும் தண்ணீர் வருகிறது. அதன்பிறகு தண்ணீர் வருவதில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். 

எப்போது குடிநீர் வரும் என வரிசையில் காத்திருக்கும் குடங்கள்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

மாக்கனூர் கிராமத்தில் ஒகேனக்கல் குடிநீர் சரியாக கிடைக்கவில்லை. இதனால் குடிநீருக்காக பக்கத்தில் உள்ள சுற்றுவட்ட கிராமங்களான காணாப்பட்டி பூச்செட்டிஅள்ளி,  ஆலமரத்துப்பட்டி ஆகிய கிராமங்களை நாடிச் சென்று சுமார் 5 கிலோ மீட்டர் வரை சென்று குடிநீர் எடுத்து வருகிறோம்.  இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் பெண்கள் இரவு நேரங்களில் தண்ணீருக்காக இரவுகளுக்கு செல்வதால் தூக்கத்தை இழந்து பெரிதும் அவதி அடைந்து நோயாளிகளாக மாறி வருகின்றனர்.

இதற்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related

“சீமைக்கருவேல மரங்களை ஒழிக்க அரசு திட்டம் வகுக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்!”