தர்மபுரி, ஆக.2- தேசிய நதிகளை உடனடியாக இணைக்க அனைத்து மாநில முதல்வர்களையும், பிரதமர் மோடியையும் கேட்டுக் கொள்கிறேன் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடகா அரசை கண்டித்து தேமுதிகவினர் இன்று போராட்டம் நடத்தினர். இதையொட்டி, போராட்டக் களத்தில் பிரேமலதா பேசும்போது, “முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு போகக் கூடாது என அனைவரும் சொன்னார்கள். ஆனால், நான் மட்டும்தான் முதல்வர் கர்நாடகாவுக்கு சென்று தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் எனச் சொன்னேன்.

இருவரும் முதல் முறை முதல்வர்கள். மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது. அதை மீறி அணை கட்டினால் மிகப் பெரிய பிரச்சினை வெடிக்கும். காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். முதல்வர் விஜய் தனது ஜோதிடர் சொன்னால் மட்டும் கர்நாடகா செல்கிறார். டி.கே.சிவக்குமாரும் பரிகாரம் செய்ய தமிழகத்தில் உள்ள கோயிலுக்கு வருகிறார். உங்கள் சுயநலத்துக்கு செல்கிறீர்கள்” என்று அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “இன்று முதல் சம்பா சாகுபடி தொடங்க வேண்டும். ஆனால் குடிக்க தண்ணீர் இல்லை. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை என்ற நிலை இருந்ததால் போராட்டம் நடத்தியுள்ளோம். நாம் கர்நாடகாவை வஞ்சிக்கவில்லை. அம்மாநில மக்களும் நன்றாக இருக்க வேண்டும். தமிழக மக்களுக்கும், கர்நாடகா மக்களுக்கும் சரியான நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். இதையொட்டி தான், உச்ச நீதிமன்றம், காவேரி மேலாண்மை மையம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது சம்பந்தமாக தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதேபோல கர்நாடகாவிலும் கடை அடைப்பு, போராட்டங்கள் நடப்பதைப் பார்க்கிறோம். இது இந்தியா - பாகிஸ்தான் போர் கிடையாது. தண்ணீருக்காக அவரவர்களின் உரிமைக்காக பேசிக் கொண்டிருக்கிறோம். நடுநிலையோடு, இரண்டு மாநிலங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை.

அசாம், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில் வெள்ளம் வந்துள்ளது. ஆனால், தென் மாநிலங்களில் வறண்டு காணப்படுகிறது. நதிகள் இணைப்பு ஒன்றுதான் இவை அனைத்துக்கு தீர்வு. காற்று அனைவருக்கும் சமம் என்பதைப் போல தண்ணீரும் அனைவருக்கும் சமம்தான். தண்ணீரை யாரும் உரிமை கொண்டாட முடியாது.

தேசிய நதிகளை உடனடியாக இணைக்க வேண்டும் என அனைத்து மாநில முதல்வர்களையும், பிரதமர் மோடியையும் கேட்டுக் கொள்கிறேன். நதி, குளம் குட்டைகளில் தண்ணீர் நிரம்பினால் தான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். தமிழக முதல்வர் விஜய்யும் இதை முன்னெடுக்க வேண்டும். அதோடு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, பிரதமர் மோடியை சந்தித்து நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றார்.

முன்னதாக காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை பாட்டிலில் எடுத்து, காவிரி தாய் தான், தமிழ்நாட்டின் நீராதாரம் காவிரி ஆறு, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கரைபுரண்டு ஓட்டும், தமிழ்நாடு செழிக்கட்டும், கர்நாடகமும் செழிக்கட்டும் என காவிரியை வணங்கி,  பாட்டிலில் இருந்த தண்ணீரை காவிரி ஆற்றில் ஊற்றி முழக்கமிட்டார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடகா அரசை கண்டித்து, தேமுதிக சார்பில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ தலைமையில் மாபெரும் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக பொருளாளர் எல் கே சதீஷ் எம்பி, இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன், திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட தேமுதிக,  திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசையும், மத்திய அரசையும், தண்ணீரை பெறாமல் இருக்கும் தமிழக அரசையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Related

“சட்டத்துறை அமைச்சர் பொய் சொல்வதில் கின்னஸ் சாதனை படைக்கிறார்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்”