நீதிமன்றம் செல்லும் அரசு ஊழியர்!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பகுதியில் வசித்து வரும் அரசு ஊழியர்களான வேதமாணிக்கம் – ரெஜினா மேரி தம்பதியினருக்கு மின் கட்டணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவர் மட்டுமே வசித்து வரும் இவர்களின் வீட்டிற்கு மே மாத மின் கட்டணமாக ரூ.56 ஆயிரம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர், மின்வாரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை தங்களது மனுவிற்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், இதுவரை அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் மட்டுமே மின் கட்டணம் செலுத்திய நிலையில், திடீரென ரூ.56 ஆயிரம் கட்டணம் விதிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விளக்கம் கேட்டு பலமுறை அதிகாரிகளை அணுகியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு இருவரும் அலுவலகம் சென்றிருந்தபோது, மின் கட்டணம் செலுத்தப்படாத காரணத்தால் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது ஜெனரேட்டர் மூலம் வீட்டிற்கு மின் வசதி செய்து பயன்படுத்தி வருவதாக வேதமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

மனஉளைச்சலுக்கு ஆளான அவர், தனது புகார் மனுவிற்கு மின்வாரிய அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உயரதிகாரிகள் தலையிட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தேவகோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் கேட்டபோது, “புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Related

“தமிழ்நாடு செல்போன் சங்கம் சார்பில் பொன்னேரியில் ரத்ததான முகாம்!”