கோயம்புத்தூர்: சர்க்காரியாவை பற்றி பேசுபவர்கள், ஜெயலலிதா ஊழலைப் பற்றி ஏன் பேசுவதில்லை? என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை குனியமுத்தூர் இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் தவெக சந்தித்த முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல்துறை மானியக் கோரிக்கையில் முதலமைச்சரின் பதிலுரைக்காக நாள் ஒதுக்கப்பட்டது. முதலமைச்சர் என்ன பேசப்போகிறார் என காத்துக்கொண்டிருந்தோம்.

4 மாதங்களில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் செயல்கள் நடந்திருக்கின்றன. கொலை, கொள்ளை, போதையினால் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனவே, கொலைகளை தடுக்கவும், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்களுக்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகிறோம் என்பதை முதலமைச்சர் விளக்குவார் என எதிர்பார்த்தோம். ஆனால், முதலமைச்சரின் பதிலுரை எதிர்பார்த்த வகையில் இல்லை.

மாறாக, திமுகவை முழு முதலாக தாக்குவதற்கு இந்த சட்டமன்ற நிகழ்வை பயன்படுத்தி இருக்கிறார். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் திமுக மட்டுமே ஊழல் செய்துள்ளதா? 1991-96 இல் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா டான்சி வழக்கு, பிளசன்ட்டே வழக்கு, சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றவர். அதுபற்றி ஏன் பேசவில்லை? முதலமைச்சர் விஜய் ஊழலை மையமாக வைத்து பேசும் பட்சத்தில் நடுநிலையோடு செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும், “ஸ்டாலினை முதலமைச்சர் என சொல்லி வாக்குகளை வாங்கியவர்களை வைத்துக்கொண்டு விஜய் ஆட்சி நடத்துகிறார். ஆர்.எஸ்.எஸ் பிள்ளை என முத்திரையிட்டவர்கள், அதிமுகவிலிருந்து வந்த சி.ஆர். விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரை வைத்துக்கொண்டு விஜய் ஊழல் எதிர்ப்பு பற்றி பேசுவது சரியாக தெரியவில்லை. சட்டமன்ற நிகழ்வுகள் எல்லாம் சினிமா பாணியில் இருக்கிறது. மரபு படி இல்லை” என்றார். தொடர்ந்து பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, “தவெக ஆட்சியில் நடக்கும் சம்பவங்களுக்கு அவர்களிடம் என்ன பதில் இருக்கிறது? அமலாக்கத்துறை மாதிரியான மத்திய ஏஜென்ஸி தாக்கல் செய்யும் ஆவணங்களை வைத்து குற்றவாளி, நிரபராதி என்று முடிவுசெய்ய முடியாது.

தமிழக அரசியல் என்பது சட்டமன்றத்துடன் முடிந்துவிடாது. சட்டமன்றத்திற்கு வெளியில்தான் மக்கள் சக்தி இருக்கிறது. மக்கள் மன்றம் இருக்கிறது. சட்டமன்றத்தில் பேசுவதால் என்ன பலன்? வெறும் வாய் சவடால் எதற்கு? யாராவது தவறு செய்திருந்தால் சட்டரீதியான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கலாமே. இந்த பேச்சு ஆதரவாளர்களை குஷிபடுத்தத்தான் உதவும். விஜய்யிடம் ஏதோ ஒரு பலவீனம் இருக்கிறது.

குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் எண்ணமிருந்தால் நடவடிக்கைகள் எடுக்கலாம். வேறு ஏதோ நோக்கம் இருக்கிறது. ஊழல் ஒழிப்பு என்றால் திமுக மட்டும்தான் ஊழலா? சர்க்காரியாவை பேசுபவர்கள், 1991 - 96 ஜெயலலிதா ஊழலை ஏன் பேசுவதில்லை?” என கேள்வி எழுப்பினார்.மேலும், “விஜய் முதலமைச்சராகி விட்டதை உணர்ந்ததாக தெரியவில்லை. தேர்தல் கால ஆலோசகர்கள் மட்டுமே இன்னும் அவரிடம் நெருக்கமாக இருக்கின்றனர். பவர் சென்டர்கள் இருப்பது நாட்டுக்கு ஆபத்து. முதலமைச்சரிடம் தகவல்களை பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. வேறு நபர்கள் மூலம் தகவல் சொல்லி அவர்கள்தான் எடிட் செய்து தகவல்களை அவரிடம் கொண்டு செல்கின்றனர்.

விஜய்க்கு முதலமைச்சர் என்ற உணர்வு வராமல் தடுப்பது பவர் சென்டர்கள்தான். இது முதலமைச்சரிடம் இருக்கும் பெரிய குறை. சட்டமன்றத்தில் இன்று சரியாக செயல்படாமல் போனதற்கு இதுதான் காரணம். பவர் சென்டர் இல்லை என அவர் சொல்லலாம். ஆனால் அதுதான் உண்மை” என தெரிவித்தார்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”