தேசிய அளவிலான இசைப் போட்டியில் 270-க்கும் மேற்பட்ட இசைக்குழுக்களுடன் போட்டியிட்டு கோவை பள்ளி மாணவ மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கோவை, சி.எஸ். அகாடமி பள்ளியின் இசைக்குழுவான சி.எஸ். ஹவுலர்ஸ் (CS Howlers), தேசிய அளவிலான யமஹா இசைப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்தியா முழுவதும் 270-க்கும் மேற்பட்ட பள்ளி இசைக்குழுக்களுடன் போட்டியிட்டு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் முன்னிலையில் இசை நிகழ்த்தி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்குழு, பல்வேறு போட்டிச் சுற்றுகளைக் கடந்து தேசிய அளவில் முதல் 20 இசைக்குழுக்களில் ஒன்றாகத் தேர்வானது. தொடர்ந்து, இறுதிப் போட்டியில் முதல் ஐந்து அணிகளில் இடம்பிடித்து இரண்டாம் இடத்தை வென்றது. இசைப் பயணத்தைத் தொடங்கியபோது வெறும் 11 வயதுடையவர்களாக இருந்த மாணவர்கள், தற்போது தேசிய அளவில் தங்களது திறமையை நிரூபித்துள்ளனர்.
மேலும், Furtados Band-It தேசிய இசைப் போட்டியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள இக்குழு, 2025-ஆம் ஆண்டு GSIS Class of Chords போட்டியில் இரண்டாம் இடத்தையும், 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.
போட்டிகளில் மட்டுமின்றி, நேரடி இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் மாணவர்கள், சொந்தப் பாடல்களை உருவாக்குதல், இசையமைத்தல், இசைத் தொகுப்பு மற்றும் ஒலிப்பதிவு போன்ற துறைகளிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 2024-ஆம் ஆண்டு Wake Up என்ற சொந்தப் பாடலை உருவாக்கியதுடன், 2025-ஆம் ஆண்டு Feeling Good பாடலுக்குப் பிரத்யேக இசைத் தொகுப்பை உருவாக்கி இசைக் காணொளியையும் வெளியிட்டுள்ளனர்.
முறையான பயிற்சி, குழு ஒருங்கிணைப்பு மற்றும் படைப்பாற்றலுடன் தொடர்ந்து சாதித்து வரும் சி.எஸ். ஹவுலர்ஸ் மாணவர்களின் இந்த வெற்றி, கோவை மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.