மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை பாதையில் கார் மீது பாறை விழுந்து கணவர் உயிரிழந்தார். மனைவி படுகாயத்துடன் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கோவை, நீலகிரி ஆகிய மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன.

மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் விடிய விடிய கனமழை பெய்தது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே அருவங்காடு ஜெகதளா பகுதியைச் சேர்ந்த பெள்ளி மகன் கிருஷ்ணமூர்த்தி (65). இவர் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தேவகி (54), மகன் கார்த்தி (29), உறவினர்கள் இந்திரா (68), சிந்தாமணி (62) ஆகியோர் கோவை மாவட்டம், சாய்பாபா காலனியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு உடல் நலம் விசாரிக்க காரில் வந்துள்ளனர்.

இவர்களின் கார் காலையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை பாதையில் பர்லியார் கீழ்ப்பகுதியில் வந்தபோது, பாறை ஒன்று உருண்டு காரின் பின் பக்கம் விழுந்தது. இதில், காரின் பின்பக்கம் அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி தேவகி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கிருஷ்ணமூர்த்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Related

“தமிழ்நாடு செல்போன் சங்கம் சார்பில் பொன்னேரியில் ரத்ததான முகாம்!”