கோவையில் கனமழையால் குடியிருப்புப் பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்ட நிலையில், மழைநீர் வடிகால் மற்றும் சாலை வசதிகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

கோவை தடாகம் சாலை அருகே சோமனூர் பகுதியில் உள்ள வி.கே.வி. அவென்யூ குடியிருப்புப் பகுதியில் பெய்த கனமழையால் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பத்தினர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அப்பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், தண்ணீரை வெளியேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்களின் பாதிப்புகளை அறிந்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, குடியிருப்புப் பகுதியில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டது.

மேலும், இனிவரும் நாட்களில் கனமழை பெய்தாலும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்பகுதி மக்களின் கோரிக்கைகளான மழைநீர் வடிகால் வசதி மற்றும் சாலை வசதிகளை ஏற்படுத்தித் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி சந்தோஷ் MLA உறுதியளித்துள்ளார்.

மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கவும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

Related

“தமிழ்நாடு செல்போன் சங்கம் சார்பில் பொன்னேரியில் ரத்ததான முகாம்!”