சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை கோபால் நகர் பகுதியில் உள்ள சாக்ரெட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடிகரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் மூன்று விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் சிலையில், விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படத்தில் அவர் கபடி விளையாடும் காட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சிலையில், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பின்னர் விஜய் பொதுவெளியில் தோன்றிய வெள்ளை சட்டை, காக்கி பேன்ட் அணிந்த தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது சிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருடன் விவாதங்களின்போது கையை கழுத்துக்கு கீழ் வைத்து சைகை செய்யும் காட்சியை பிரதிபலிக்கும் வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் இதேபோன்று விஜய்யின் உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மூன்று விதமான தோற்றங்களில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிலைகளை காண சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். சமூக வலைத்தளங்களிலும் சிலைகளின் புகைப்படங்கள் பரவி வரும் நிலையில், அப்பகுதியில் ஊடகங்களும் திரண்டு செய்தி சேகரித்து வருகின்றன. இதையடுத்து, விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலைகள், பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இன்று மாலை வரை காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் வெவ்வேறு தோற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் மூன்று விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள சம்பவம் ஆர்.கே.நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”