சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவரிடம் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா கடிதத்தை அளித்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து விலகினார்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட சி. விஜயபாஸ்கர், வெற்றிபெற்று எம். எல். ஏ. வானார்.
முதலமைச்சர் விஜய்க்கான பெரும்பான்மையை நிரூபிக்கும் போது, அதிமுகவில் பாதி எம். எல். ஏ. க்கள், அதாவது 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். அந்த 25 பேரில் விஜயபாஸ்கரும் ஒருவர். எடப்பாடி பழனிசாமி அணிப் பக்கம் நிற்காமல் சி. வி. சண்முகம் அணிப் பக்கம் விஜயபாஸ்கர் நின்றார்.
சமரச பேச்சுவார்த்தைகளும் அரங்கேறின. ஆனால் 4 அதிமுக எம். எல். ஏ. க்கள் தங்களது பதவியினை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில் ஜூன் 16 ஆம் தேதி, விஜயபாஸ்கரும் தனது எம். எல். ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகரிடம் வழங்கினார்.
https://x.com/Vijayabaskarofl/status/2066847312220201153
அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு:
அதனைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து விலகுவது ஏன்? என்பது குறித்த விளக்கத்தை அறிக்கை மூலமாக அளித்துள்ளார்.
அதன்விபரம் : புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த மகத்தான மக்கள் இயக்கத்தில், 'அம்மா' என்ற ஆருயிர் ஒற்றை வார்த்தையால் ஈர்க்கப்பட்டு, என் மாணவர் பருவத்திலிருந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகவும், இரண்டாவது தலைமுறையாகவும் என் வாழ்க்கைப் பாதையில் இயக்கத்தோடு என்னை அர்ப்பணித்தவன் நான்.

எனக்கு இந்த இயக்கம் ஓர் அரசியல் அமைப்பு மட்டுமல்ல; என் உணர்வும், என் அடையாளமும், என் வாழ்க்கையின் ஒரு பகுதியும் ஆகும். மாணவர் அணியில் தொடங்கிய என் அரசியல் பயணம், எழுச்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் களங்கள் என இந்த இயக்கம் ஓர் அர்ப்பணிப்புமிக்க தொண்டனாக என்னை வழிநடத்தியது. என் இளமை, என் உழைப்பு, என் கனவுகள் அனைத்தும் இந்த இயக்கத்தோடு பின்னிப்பிணைந்தவை.
அம்மா வாழ்ந்த பொற்காலத்தில், இந்த இயக்கத்தில் பணியாற்றியதை ஒரு பொறுப்பாக மட்டுமல்ல; பெரிய பெருமையாகவும், பெரும் வரமாகவும், என் பாக்கியமாகவும் நான் கருதினேன். ஆனால் இன்றோ, தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இந்தச் சூழலில், மனமெல்லாம் தீராத வேதனையைச் சுமந்தபடி என் பயணத்தை தொடர்வது சரியானதாக இருக்காது என்ற உணர்வோடு இந்த முடிவை எடுக்கிறேன்.
எனவே, கனத்த இதயத்துடனும் கலங்கிய மனதுடனும், இதுவரை என்னுடன் பயணித்த ரத்தத்தின் ரத்தங்களான கழகத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு, இந்த மகத்தான இயக்கத்திலிருந்து மனவலியோடு விலகுகிறேன்.
நான் விலகுவது ஒரு கட்சியிலிருந்து அல்ல; என் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்திலிருந்து. வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில், கனத்த இதயத்துடன் இயக்கத்திலிருந்து விடைபெற்றாலும், என் மண்ணுக்கான மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம்போல் தொடரும்.. தொடர்வேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.