தூத்துக்குடி, அக்.4-
ஆணவக்கொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் தொடரும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐ.டி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுர்ஜித்தின் பெற்றோரும் காவல் உதவி ஆய்வாளர்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பைக் கண்டித்தும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கவினின் பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆறுமுகமங்கலத்தில் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இன்று மூன்றாம் நாளாக அவர்களது வீட்டின் முன்பு கையில் கவினின் புகைப்படத்துடன் அமர்ந்தபடி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும். உடனடியாக அரசானை வெளியிட வேண்டும் பெயரளவிற்கு மேல்முறையீடு செய்யாமல் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அவர்களது உறவினர்களும், ஊர்மக்களும் சமூக ஆர்வலர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கவின் தாய் தமிழ் செல்வி பேசுகையில்,
எங்களுக்கு நிதி வேண்டாம். மகனை இழந்து தவிக்கும் எங்களுக்கு நீதி தான் வேண்டும். அரசு மேல்முறையீடு செய்து உண்மையான நீதி வேண்டும். சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மேல் முறையீடு செய்வதாக உறுதியளித்தார். அதன்படி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து எங்களுக்கு நீதியை வாங்கி தர வேண்டும். என்றார். அப்போது, கவின் பெற்றோர்களிடம் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பின்னர், சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு பேசுகையில், கடந்த 1 ம் தேதி முதல் போராட்டத்தில் கவின் பெற்றோர் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சராக மட்டும் வரவில்லை உறவாக வந்துள்ளேன். கவின் படுகொலை செய்யப்பட்ட அன்றே குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போராடினோம். கவின் தாய் நீதி வேண்டும் என தெரிவித்துள்ளார். தீர்ப்புக்கு எதிரான மனநிலையில் தான் நாங்களும் இருக்கிறோம். ஆவண படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என சட்டமன்றத்தில் தெரிவித்தேன். ஆவண படுகொலைக்கு எதிரான தடுப்புச் சட்டம் இயற்றப்பட காலதாமதம் ஆகாது. இன்னைக்கு வந்து கடந்த காலத்தில் போடப்பட்ட குற்றப்பத்திரிக்காயின் அடிப்படையில் இது இருவரும் விடுவிக்கப்பட்டுஉள்ளனர். இந்த வழக்கிலிருந்து எந்த குற்றவாளிகளும் தப்பிக்க முடியாது என்ற அடிப்படையில் புதன்கிழமை மேல்முறையீடு செய்வதாக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மூத்த வழக்கறிஞர் பா.பா.மோகன் வழக்கறிஞராக நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ஜாதியை பாகுபாடுகள் நடைபெறும் நிகழ்வுகளை தமிழக முதல்வர் கூடுதலாக கண்காணிக்க உத்தரவுள்ளார். அதனால் அத்தகைய குற்றவாளிகள் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என பேசினார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் வன்னியரசு வேண்டுகோளை ஏற்று காத்திருப்பு போராட்டத்தை கைவிடுவதாக கவின் தாய் தமிழ்ச்செல்வி தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், இந்த வழக்கில் மற்ற வழக்குகளைப் போல இல்லாமல் அரசு கூடுதல் கவனம் செலுத்துகிறது. கவின் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
குற்றப்பத்திரிகையில் சிலர் விடுவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் தெளிவாக தெரிவித்துள்ளார். அரசு தரப்பு வழக்கறிஞரும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
எனவே, இந்த போராட்டத்தை சட்டப் போராட்டமாக தொடர்ந்து நடத்துவோம். தீர்ப்பு கிடைப்பது மட்டும் போதாது; கவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே அரசு நிற்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், கவின் வழக்கில் மூத்த வழக்கறிஞர் பாப்பா மோகனன் அவர்களை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். இதுதொடர்பாக சட்டத்துறை அமைச்சரும் ஏற்கனவே உறுதியளித்துள்ளதாகவும், அந்த நடவடிக்கை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
குற்றப்பத்திரிகையில் என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளது, எவை விடுபட்டுள்ளன, நீதிமன்றத்தில் என்னென்ன ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பாகவும் முழுமையாக ஆய்வு செய்து, எந்தவித குறையும் இல்லாமல் மேல்முறையீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, மாட்டிறைச்சி விற்பனை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “மனிதர்கள் பாதிக்கப்படுவது குறித்து நான் கவலைப்படுகிறேன். மனிதர்களுக்காக நிற்பதே எனது நிலைப்பாடு. மக்களின் மனநிலையை அறிந்து, மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் உணர்வுக்கு எதிராக எதையும் செய்யக்கூடாது என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு” என்றார்.
தமிழகத்தில் புதிய அரசியல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியா கூட்டணியில் புதிய கட்சி இணைந்திருப்பதை வரவேற்பதாக தெரிவித்தார். “எங்களது தலைவர் திருமாவளவன் ஏற்கனவே திமுகவும் அந்த கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார். பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார் அரசியலுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. அந்த வகையில் புதிய கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.
மேலும், சமூகநீதி துறை சார்பில் தென் மாவட்டங்களில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும், இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் பயிற்சி வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
குறிப்பாக சினிமா துறையில் பயிற்சி பெறுவதற்காக தென் மாவட்டங்களில் இருந்து வெளியூர் செல்லும் இளைஞர்களுக்கு, தென் மாவட்டங்களிலேயே பயிற்சி பெறும் வகையில் மையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அதேபோல், காவல்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சமூகநீதி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.