சென்னை: தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவு, மதிமுக பொதுக்குழுவை கூட்டி ஆலோசித்த பிறகே எடுக்கப்படும் என்றும் வைகோ தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளளர்களை சந்தித்தார். வைகோ செய்தியாளர்கள் சந்திப்பு : தூத்துக்குடியில் "கிரீன் காப்பர்" என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படலாம் என்றும், அதற்கு தமிழக முதலமைச்சர் அனுமதி வழங்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தனது நாடாளுமன்ற உரைகளை ஆறு பகுதிகளாக தொகுத்து நூலாக வெளியிட உள்ளதாகவும், அந்த நூல் டெல்லியில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். அந்த விழாவில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்றும், நூலின் முதல் பிரதியை முதலமைச்சர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
முதலமைச்சர் தன்னிடம் 45 நிமிடங்கள் பேசுவதற்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்த வைகோ, இந்த சந்திப்பு தனக்கு மிகுந்த மனநிறைவை அளித்ததாக குறிப்பிட்டார். ஸ்டெர்லைட் ஆலையை உளவுத்துறை தகவலின் அடிப்படையில்தான் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மூடினார் என்றும், ஆனால் கடைசி வரை அப்போதைய அதிமுக அரசு ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக இருந்தது என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், "அரசு அமைந்ததிலிருந்து கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் ஆட்சி நடைபெற்று வருகிறது" என்றும் அவர் தெரிவித்தார். மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கேட்கப்பட்டபோது, தற்போது அது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது என்று பதிலளித்தார். தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவு, மதிமுக பொதுக்குழுவை கூட்டி ஆலோசித்த பிறகே எடுக்கப்படும் என்றும் வைகோ தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.