பெண்கள் மீதான தரம் தாழ்ந்த விமர்சனத்தை நிறுத்தாவிட்டால் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்யும் வகையில் பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது எங்களுக்கு மரியாதை இருப்பதாகவும், ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு பெண்களை தரம் தாழ்ந்து பேசி வருவதாகவும் கூறினார்.
மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தற்போது தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ள நிலையில், அடுத்து கிரிமினல் புகார் அளிக்கவும் இருப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெண்கள் மீதான விமர்சனத்தை தொடர்ந்தால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் எனவும், ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை விடுத்தார். மேலும் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு பட்டினம்பாக்கம் பகுதி மீனவர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் தமிழக அரசின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் எனவும் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.