தூத்துக்குடி விசாரணைக் கைதி அருணாச்சலம் உயிரிழப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மனிதநேய மக்கள் கட்சி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம், சட்டவிரோத மது விற்பனை தொடர்பான விசாரணைக்காக கடந்த ஜூலை 17ஆம் தேதி காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அதே நாளில் மாலையே பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட அவர், ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் தன்னை தலையில் தாக்கியதாக அருணாச்சலம் கூறியதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையென நிரூபிக்கப்பட்டால், அது சட்டத்தின் ஆட்சியையே கேள்விக்குறியாக்கும் மிகக் கொடூரமான மனித உரிமை மீறலாகும்.
சில நாட்களுக்கு முன்புதான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் காவல்துறையினரின் தாக்குதலுக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. அந்தச் சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்போது தூத்துக்குடியில் மற்றொரு விசாரணைக் கைதி உயிரிழந்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. தொடர்ச்சியாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே கடுமையான அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் உருவாக்குகின்றன.

சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ள காவல்துறை, சட்டத்திற்கு மேலான அமைப்பாக ஒருபோதும் செயல்பட முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும், அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்துவது காவல்துறையின் கடமையே தவிர, தண்டனை வழங்குவது அவர்களின் அதிகாரம் அல்ல. விசாரணை என்ற பெயரில் தாக்குதல் நடத்துவதும், காவலில் மனித உயிர்கள் பறிபோவதும் ஜனநாயக நாட்டிற்கு அவமானமாகும்.
எனவே, அருணாச்சலம் உயிரிழப்பு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள்மீது கொலை உள்ளிட்ட உரிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்த அருணாச்சலம் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.