சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் 23 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக இருப்பவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர். டாஸ்மாக் பணியாளர்களுடன் அரசு கலந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் ஒரு மாதம் டாஸ்மாக் விற்பனையாளராக 11 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்ற வேண்டும் என சவால் விடுத்தார் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க சிறப்பு தலைவர் பாரதி.

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் 23 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக இருப்பவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 200 கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சிறப்பு தலைவர் பாரதி தலைமையில்  இந்த உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. 

சம்பளம் உயர்த்தாவிட்டால் பொதுமக்களிடம் சர்வீஸ் சார்ஜ் வாங்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்  நடத்தினர். தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் உண்ணாநிலை போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்திற்கு இடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க சிறப்பு தலைவர் பாரதி, பத்து ரூபாய் வேண்டாம் பணி நிரந்தரம் வேண்டும், மதுவை ஒழிப்போம் மக்களை காப்போம் என்ற முழக்கத்தோடு தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கம் குடும்பத்துடன்  ஒரு நாள் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. 

தொழிலாளர்களை துன்புறுத்தக் கூடாது மாற்று திட்டம் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் மிஷின் மூலம் காலி பாட்டில்களை திரும்ப பெரும் வகையில் கொண்டு வந்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால் அந்த இயந்திரம் ஸ்கேன் ஆகவில்லை என்று பிரச்சனை ஏற்படுகிறது.  மதுவிலக்கு ஆயத்த தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் அவர்களுக்கு அன்பான வேண்டுகோளையும் சவாலையும் முன்வைக்கிறோம். மதுபான விற்பனையில் ஒரு மாத காலத்திற்கு இந்த டாஸ்மாக் கடைகளில் 11 ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு பணி மேற்கொள்ள வேண்டும் , அமைச்சர் அப்படி ஒரு மாத காலம் கடந்துவிட்டால் எங்கள் ஊழியர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் 11 ஆயிரம் ரூபாய்க்கு பணி செய்ய தயாராக உள்ளனர்.

தேர்தல் வாக்குறுதியாக தற்பொழுதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் ஒப்பந்த முறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரையும் நிரந்தர ஊழியராக பணி நிரந்தரம் அளிக்கப்படும் என குறிப்பிட்டு இருந்தார் , கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கை டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு மட்டும் கிடையாது தூய்மை பணியாளர்கள், மின்சாரத் துறை ஊழியர்கள், போக்குவரத்து துறை ,செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகிய அனைத்து துறையினருக்கும் தேர்தல் வாக்குறுதியின் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்.

உழைப்பு சுரண்டலை எப்போது ஒழிப்பீர்கள் , உழைப்புச் சுரண்டல் பற்றி பேசுவதற்கு அமைச்சர் தயாராக இல்லையா, பதினோராயிரம் ரூபாய் ஊதியத்தில் குடும்பத்தை நடத்த முடியாது அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க முடியாது , தமிழகத்தில் மற்றொரு முகம் உள்ளது அது உழைக்கும் மக்களின் தொழிலாளர் வர்க்கத்தின் முகம். பணி நிரந்தரத்திற்கு அமைச்சர் அவர்களுக்கு நாங்கள் ஒரு வழி கூறுகிறோம். சமீபத்தில் கட்சி நிதியாக 120 கோடி ரூபாய் வழங்கி வருவதாக குறிப்பிட்டீர்கள், அந்த நிதியினை பணி செய்யும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வாக கொடுங்கள் 10 ரூபாய் பிரச்சனை மக்களிடையே ஏற்படாது.

துறை சார்ந்தவர்களுக்கு அரசின் கஜானா நிரம்ப வேண்டும் அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் வருமானம் கிடைக்க வேண்டும் என்று மட்டுமே நினைவில் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளையும் மூடி விட்டால் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள் , தற்பொழுதய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தேர்தலுக்கு முன்பாக குறிப்பிட்டது போல் அரசு சார்பில் டாஸ்மாக் நடத்த தேவையில்லை. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கினால் மக்கள் நன்றாக இருப்பார்கள்.

எங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி , ஸ்டாலின் ஆகியோரின் ஆட்சியில் பார்க்காத வகையில் நான்கு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி சந்திக்கும். தமிழக முதலமைச்சர் விஜய் அனைத்து பெரும் நிறுவனங்களையும் சார்ந்த அதிகாரிகளை சந்தித்து வருகிறார். சினிமாத்துறை சின்னத்துரை கலைஞர்களை சந்தித்து வருகிறார். ஆனால் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினருடன் இதுவரை ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. முதலமைச்சர் , அமைச்சர் விக்னேஷ் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுக்க வேண்டும். மேலும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம். 

டாஸ்மாக் பணியில் ஈடுபட்டு வரும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள். சமூக நீதி எங்கே சென்றது அமைச்சரே , எங்களை போராடுவதற்கு அனுமதிக்க இவர்கள் விரும்பவில்லை. நேற்று இரவு வரை எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. காவல்துறை எங்களை மிரட்டுகிறது. இதுதான் ஜனநாயகமா இதுதான் தூய சக்தியா ?. அற வழியில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு கூட இங்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எங்களுடன் அரசு கலந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோம்.

மேலதிகாரிகள் அதிக அளவில் ஊழல் செய்து வரும் நிலையில் உழைப்பு சுரண்டலில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களுக்கு தற்காலிக பணியிட நீக்கம் மற்றும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது.ஊதியம் பத்தாத ஒரே காரணத்தினால் தான் இந்த நிலை ஏற்படுகிறது , ஒவ்வொரு மாவட்ட மேலாளருக்கும் தொழிலாளிகள் 10 லட்சம் ரூபாய் கப்பம் கட்ட வேண்டிய நிலை உள்ளது. ஒவ்வொரு மாவட்ட மேலாளரும் பெரும்பான்மையான ஊழலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்டறிந்து உரிய தண்டனை வழங்குவதற்கு உங்களால் முடியுமா?. 

அவர்களை விட்டுவிட்டு அடிதட்டு ஊழியர்களை தற்காலிக பணியிட நீக்கம் பணியிடை நீக்கம் ஆகியவை செய்வது நியாயமா?, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனை வழக்கு சங்கத்தின் சார்பில் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். பத்து ரூபாய் வாங்காமல் இருப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் ஊதிய உயர்வு கொடுப்பதற்கு நீங்கள் தயாராக உள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

Related

“கோவில்பட்டி அரசு பள்ளி மாணவியர் விடுதியில் சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு ”