சென்னை, ஆக.2: உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சமூக குழந்தைகள் நல நிலையம் சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் மற்றும் டீன் பேராசிரியர் டாக்டர் அரவிந்த் தலைமை தாங்கி, பலூன்களை பறக்கவிட்டு தாய்ப்பால் விழிப்புணர்வு மனித சங்கிலியை துவக்கி வைத்தார். குழந்தைகள் நலத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் கணேஷ் முன்னிலை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜோதி குமார், ஆர்.எம்.ஓ. டாக்டர் வனிதா மலர், உதவி பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இப்ராஹிம் சாலையில் நடைபெற்ற மனித சங்கிலியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தாய்ப்பாலின் அவசியம் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியில் அதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் வடசென்னை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை விளக்கும் புகைப்படக் கண்காட்சி, செல்பி பூத், விழிப்புணர்வு கோலங்கள் உள்ளிட்ட காட்சிகளை டாக்டர் அரவிந்த், டாக்டர் கணேஷ், டாக்டர் ஜோதி குமார், டாக்டர் வனிதா மலர் ஆகியோர் பார்வையிட்டனர்.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய்மார்களுக்கும், பொதுமக்களுக்கும் தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி நிறைவில் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.