சென்னை: எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வடபழனி வளாகப் பன்முகக் கலை மற்றும் வணிகவியல் கல்விப் புலத்தில் (FLABS) முதலாமாண்டு மாணவர்களுக்கான Induction Day (தொடக்க விழா) நிகழ்ச்சி வடபழனி வளாகக் கலையரங்கில் நடைபெற்றது.
முதல் நிகழ்வாகக் குத்து விளக்கு ஏற்றலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. வடபழனி வளாக பன்முகக் கலை மற்றும் வணிகக் கல்விப் புலத்தின் ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் ஜே.முத்துலேகா நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்.

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவன வடபழனி வளாக கல்விப்புலம் & நிர்வாக இயக்குநர் முனைவர் ஆர். வெங்கடேஷ் பாபு மாணவர்கள் தம் தனித்திறன்களை வளர்த்துச் சாதிப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறி வாழ்த்துரை வழங்கினார். மேலும், கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்களையும் முதலாமாண்டு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்துச் சிறப்பித்தார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நாடறிந்த பேச்சாளரும் எழுத்தாளருமான தமிழருவி மணியன் கலந்து கொண்டார். பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நான் அறிவுரை கூற வரவில்லை. சில பரிந்துரைகள் செய்ய விரும்புகிறேன் என்று தன் உரையைத் தொடங்கினார். இந்தக் கல்வியாண்டில் புதிதாகக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதலையும் கல்வியின் தேவை மற்றும் வெற்றி தோல்விகளின் தன்மைகள் குறித்தும் விளக்கிக் கூறினார்.

பெற்றோர்களைத் தெய்வத்தைப் போல வணங்கி வாழ வேண்டும். எந்தச் சுயநலமும் இல்லாமல் கடைசிவரை பிள்ளைகளைக் காக்கின்றவர்களாக இருப்பவர்கள் தாயும் தந்தையும் மட்டுமே என உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தார்.
ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்ப்பது கல்வி மட்டுமே ஆகும். ஆகையால், பேராசிரியர்களிடம் நன்கு பழகி, ஒவ்வொருவரிடமும் உள்ள அறிவைப் பெற்றுப் பயனடையுமாறு அறிவுறுத்தினார். நம்மைச் சுற்றிப் பல்வேறு பள்ளங்கள் தோண்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் விழுந்துவிடாமல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். எந்தச் செயலைச் செய்யும் போதும் முழுமையாக அதில் உங்களைக் கரைத்துக் கொள்வதுபோல் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டுமென ஒரு ஜென் கதையின் மூலம் விளக்கித் தன் சிறப்புரையை ஆற்றினார்.
IQAC ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் ஜெயஸ்ரீ நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.