சென்னை: லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை மக்கள் தேர்வு செய்துள்ளனர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ராஜேஷ் தெரிவித்தார்.
அதிமுக வட சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராஜேஷ், இந்த நாள் இனிய நாள். நம்முடைய தலைவர் விஜய் அவர்கள் தலைமையை ஏற்று, பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களை சந்தித்து கழகத்தில் இணைத்துக் கொண்ட மகிழ்ச்சியான தருணம்.
மக்களுக்கான அரசு, மக்களை நாடி ஒரு அரசு என்ற விஷயத்தில் மக்கள் கொடுத்த தீர்ப்பை வரவேற்கும் விதமாகவும், எதிர்பார்க்கும் விதமாகவும் இன்று மகிழ்ச்சியான, நிறைவான மனநிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றோம். தமிழக மக்கள் நம்முடைய எம்ஜிஆர், அம்மா வழியில் நம்முடைய முதலமைச்சர் பணியாற்றும் விதம் அமைந்திருப்பதால், அனைத்து உறவுகளும் சந்தோஷப்படும் வகையில் கண்டிப்பாக வரும் காலம் நன்றாக இருக்கும். அதன் அடிப்படையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறோம். தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த், சபாநாயகர், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதாவ் அர்ஜுனா அவர்களை பார்த்து கழகத்தில் இணைந்திருக்கிறோம்.
ஏன், எதற்காக அதிமுகவிலிருந்து விலகுகிறீர்கள் என்ற கேள்விக்கு, செயல்பாடுதான் அதிருப்தி. தலைமை விமர்சிக்க வேண்டுமென்றோ, குற்றச்சாட்டு சொல்ல வேண்டுமென்றோ என்ற தருணத்தில் இல்லை. நல்ல தலைவர் என்பது வரும் தலைமுறையை வளர வைத்து அழகு பார்ப்பதுதான் நல்ல பண்பு. மாவட்ட செயலாளர் என்பது நல்ல அங்கீகாரம். எங்களை கேட்காமல் பல நிர்வாகிகளை நியமிப்பது, அந்த மாவட்டத்துக்கான ஓட்டங்கள் கிடைக்காது. அது சரிவர பணி செய்ய முடியாது. அது தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்தும்.
நல்ல விஷயத்திற்காக இணைந்திருக்கிறோம். கடந்த காலம் கடந்து போகட்டும். ஆர்கே நகர் அம்மாவின் தொகுதி. எங்களின் பணி என்னவென்று மக்களுக்கு நன்றாக தெரியும். ஒரு மாற்றம் தேவை என்பதற்காக மக்கள் அடையாளம் செய்து கொடுத்தார்கள். அந்த மாற்றம் நல்ல மாற்றமாக, லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியாக அடையாளமாக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். நல்ல அடையாளம் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.