பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் கைவிடப்படும் என்று சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் திறனுடன் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் (AAI) இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரத்தின் வளர்ந்து வரும் தேவைகள், பயணிகளின் வசதி, தொழில் வளர்ச்சி மற்றும் சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், புதிய விமான நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

புதிய விமான நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யும்போது, விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படாமலும், குடியிருப்புகள் பெருமளவில் அகற்றப்படாமலும் இருப்பது முக்கியம். ஆனால், முந்தைய அரசு விவசாயிகளையும் குடியிருப்புகளையும் அதிக அளவில் பாதிக்கும் வகையில் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த நிலையில், 20.01.2025 அன்று அப்பகுதிக்கு நேரில் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்ததாக முதலமைச்சர் தெரிவித்தார். அப்போது, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன், பரந்தூரில் விமான நிலையத் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், குறைந்த அளவு விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையில் மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

அதன்படி, உயர் அதிகாரிகள், துறை வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய விமான நிலையம் அமைக்கக்கூடிய சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். அந்த இடங்களின் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

இதனிடையே, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். விமான நிலையத்தின் வடமேற்குப் பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 2 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய Terminal-5 என்ற புதிய பயணிகள் முனையம் அமைக்க, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் இணைந்து அணுகுசாலை மற்றும் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது நடைபெற்று வரும் Terminal-3 பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும், சென்னை விமான நிலையத்தின் பயணிகளைக் கையாளும் திறன் ஆண்டுக்கு 3.5 கோடியாக உயரும். அதனைத் தொடர்ந்து புதிய Terminal-5 செயல்பாட்டுக்கு வந்த பிறகு, சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு மொத்தம் 5.5 கோடி பயணிகளைக் கையாளும் திறனைப் பெறும்.

இதன்மூலம், சென்னை விமான நிலையத்தின் சேவைகள் மேலும் மேம்படுத்தப்படுவதுடன், புதிய விமான நிலையம் அமைக்கப்படும் வரை சென்னையின் எதிர்கால பயணிகள் போக்குவரத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ஏற்கனவே அளித்த உறுதியின்படி, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் கைவிடப்படும் என்றும் சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்தார்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”