சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள், தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் தலைமையிலும், ஒன்றிணைந்த செவிலியர்கள் சங்கங்களின் ஆதரவுடனும், மூன்று அம்ச பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் அரசு கவன ஈர்ப்பு போராட்டத்தை இன்று தொடங்கினர். போராட்டத்தின் முதல் நாளாக மாநிலம் முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து, பொதுமக்களுக்கு எந்தவித சேவை பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியில் ஈடுபட்டபடியே தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

 இதன் தொடர்ச்சியாக சென்னையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
 

செவிலியர்கள் முன்வைத்துள்ள மூன்று முக்கிய கோரிக்கைகள்:
அரசாணை எண் 204 மூலம் மேற்கொள்ளப்படும் செவிலியர் ஆட்குறைப்பு நடவடிக்கையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மெண்டார் செவிலியர்களின் ஆட்குறைப்பு நடவடிக்கையையும் கைவிட வேண்டும்.
தொகுப்பூதிய செவிலியர் நியமன முறையை ரத்து செய்து, தற்போது தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் அனைத்து செவிலியர்களுக்கும் உடனடியாக பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 'செவிலியர் அலுவலர்' என்ற பெயர் மாற்றம் மற்றும் பணி வரன்முறை தொடர்பான அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 3 முதல் 5 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, நோயாளிகள் சேவையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்றியபடியே போராட்டம் நடைபெறும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


மேலும், கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு உடனடியாக சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டங்களை அறிவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சக்திவேல், வடக்கு மண்டல பொதுச் செயலாளர் கோபால்தேவி, தென் மண்டல பொதுச் செயலாளர் ஜோதி, சென்னை மண்டலத் தலைவர் சந்திரகலா, மாநில இணைச் செயலாளர் ஜீவா ஸ்டாலின், தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் நலச் சங்க மாநில செயலாளர் அம்பேத்கர் கணபதி, மாநில துணைத் தலைவர் செந்தில்குமாரி மற்றும் நிர்வாகிகள் சாந்தி, மாரியம்மாள், அழகர் ராஜா, வேல் மோகன்தாஸ், குருநாதன், முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.

Related

“காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தாதது வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!”