சென்னை விமான நிலையத்தின் 3 வது முனையம் ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்படும் என ஆணையக இயக்குனர் ராஜா கிஷோர் தெரிவித்தார். 

அவர் நிருபர்களிடம் கூறியதாவது : இந்திய விமான ஆணையகம் சார்பில் அக்டோபர் 10 ந்தேதி வரை 24 நாட்கள் விமான பயணிகளிடம் குறைகள், கோரிக்கை, மேம்படுத்த கூடிய ஆலோசனைகளை பெறும் யாத்திரி சேவா அபியான் நடக்கிறது. கடந்த ஆண்டு பயணிகள் தெரிவித்த பல்வேறு புகார் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பயணிகளுக்கு விமான பயணம் எளிதாக இருக்க 24 மணி நேரமும் உதவி மையம் செயல்படுகிறது. 

சென்னை விமான நிலையத்தில் தற்போது ஆண்டுக்கு 2.3 கோடி பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். 3 கோடி வரை பயணிகள் கையாளும் வசதி இருக்கிறது. பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 3 வது முனையம் விரிவாக்கப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இந்த முனையத்தின் கட்டுமான பணிகள் 2027ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்ததும் கூடுதலாக 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கிடைக்கும்.

விமான நிலையத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மழைக்காலங்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2.5 கி.மீட்டர் தூரம் ப்ணி செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

சென்னையில் ஒரு மணி நேரத்திற்கு 36 விமான சேவை இயக்க முடியும். கட்டுமான பணிகள் முடிந்த பின் ஒரு மணி நேரத்திற்கு 45 சேவைகள் கையாள முடியும். 14 ஏரோ பிரிட்ஜ்க்ள் உள்ளன. 3வது முனைய பணிக்ள் முடிந்த பின் 23 ஏரோ பிரிட்ஜ் கிடைக்கும். வெளியில் உள்ள நடைமேடைகளுக்கு செல்வதால் காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் வந்தன. 

சென்னை மருத்துவ சிகிச்சைக்காக வரும் பயணிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. உடமைகள் தவறாமல் பயணிகளுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் திட்டங்கள் செய்யப்படும். டிஜி யாத்ரா முலம் 35 சதவீத பயணிகள் பயன்படுத்துகின்றனர். குறித்த நேரத்தில் விமானங்களை இயக்கும் விமான நிலையங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. 

விமான நிலையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் மற்றும் வெளிப்புற வாகன நிறுத்துமிடங்கள் இணைந்து ஒரே நேரத்தில் 2,157 கார்களை நிறுத்தும் வசதி உள்ளது. இருசக்கர வாகனங்களுக்கும் போதிய இடவசதி செய்யப்பட்டுள்ளது.

விமான நிலைய வளாகத்துக்குள் குரங்கு ஊடுருவிய சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா முலம் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். விலங்குகளுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற அரசு நடைமுறையின்படி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் மூலம் குரங்கைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண் பயணிகளின் வசதிக்காக விமான நிலையத்தில் 36 புதிய சானிட்டரி நெப்கின் வழங்கும் இயந்திரங்கள் அமைக்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. 

மழைக்காலத்தில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் வகையில், ஐஐடி மெட்ராஸ் உதவியுடன் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமான நிலையத்தின் முதன்மை ஓடுதளம் மற்றும் இரண்டாம் நிலை ஓடுதளப் பகுதிகளில் மையக் கோட்டிலிருந்து 140 மீட்டர் வரையிலான பகுதி பாதுகாப்பு காரணங்களுக்காக சமதளமாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் கிரேன்களைப் பயன்படுத்தி முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கான்கிரீட் தகடுகளை அமைக்கும் முறையில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து விமானப் பாதுகாப்பு நடைமுறைகளின்படி, டிஜிசிஏ மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அனுமதியுடன் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தரைப்பகுதியிலேயே இரும்புக் கம்பிகளுடன் கூடிய கான்கிரீட் கட்டமைப்பை உருவாக்கும் முறையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மொத்தம் 4.5 கி.மீ. தொலைவுக்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதில் 2.5 கி.மீ. தொலைவுக்கான பணிகள் விரைவில் நிறைவடையும் நிலையில் உள்ளன. மீதமுள்ள 2 கி.மீ. பணிகளும் விரைவில் முடிக்கப்படும்.

சென்னை விமான நிலைய சரக்கு முனையத்துக்கு வரும் கனரக வாகனங்களால் ஏற்படும் நெரிசலைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 19.06 ஏக்கர் நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையம் விலைக்கு வாங்கியுள்ளது. இதற்கான நிதிப் பரிமாற்ற நடைமுறைகள் நிறைவடைந்ததும் சரக்கு வாகனங்களை நிறுத்துவதற்கான தற்காலிகப் பகுதியாகப் பயன்படுத்தப்படும்.

உயர்மதிப்புள்ள சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தாமதமின்றி செல்லும் வகையில் பசுமை வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் தாம்பரம் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ளன.

விமான நிலைய ஓய்வறைகளில் தனித்தனி சமையலறைகள் அமைக்கப்பட்டு சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். உணவின் தரம், சுகாதாரம் மற்றும் விலை ஆகியவற்றை கண்காணிக்க வணிகத் தணிக்கைக் குழுக்கள் மூலம் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

பயணிகளுக்கு பல்வேறு உணவு வகைகள் நியாயமான விலையில் கிடைக்கும் வகையில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் புதிய உணவு மற்றும் ஓய்வறை சேவை ஒப்பந்தங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

Related

“இந்தியாவில் பிரதமராக வேண்டுமென்றால் மக்களவையில் 272 எம்பிகளுக்கு தலைவர் ஆகவேண்டும் ”