சென்னை அடுத்த கோவிலம்பாக்கம், எஸ். கொளத்தூர், பிள்ளையார் கோயில் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது இரண்டாவது  மகள் புவனேஸ்வரி (27). இவர்  கடந்த சில வருடங்களுக்கு முன் எம்.எஸ்.சி.பி. எட். முடித்து ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2024ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சாங்கரணியைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கு திருமணம் பேசி திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமணத்தின் போது பெண்ணிற்கு 50 சவரனும், மாப்பிள்ளைக்கு 20 சவரன்  நகைகள் மற்றும் ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணை கொடுத்துள்ளனர். ஆனாலும் திருமணத்திற்குப் பிறகு ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சனை கேட்டு புவனேஸ்வரியை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இதையடுத்து, சமீபத்தில் நடந்த குழந்தையின் முதலாண்டு பிறந்தநாளுக்கு புவனேஸ்வரியின் பெற்றோர் 1 1/4 சவரன் செயின்  குழைந்தைக்கு போட்டுள்ளனர். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த  20 ந்தேதி தனது அப்பா வீட்டருகே உள்ள கோயிலில் திருவிழா நடப்பதால் புவனேஸ்வரி தந்தை வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார்.  இந்நிலையில் அவரிடம் தொலைபேசியில் பேசிய கணவர் ஜானகிராமன் "வீட்டிற்கு வர வேண்டாம், உன் தாய் வீட்டிலேயே இரு" என கூறினாராம். இதனால்  மனஉளைச்சலுக்கு ஆளான புவனேஸ்வரி  நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஊஞ்சல் கொக்கியில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் இருந்து இறக்கி உடனடியாக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு   பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.

உயிரிழந்த புவனேஸ்வரி தனது கணவர் ஜானகிராமன் உடன்

இதையடுத்து பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பிரதீப் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அவரது, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது மகளின் கணவர் வீட்டார் கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டாள். அதனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

திருமணமான 2 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்ததால், வரதட்சணை கொடுமை நடந்துள்ளதா என விசாரிக்க கிண்டி வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”