சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள கொடுங்கையூர் குப்பைமேட்டில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குப்பைமேட்டில் தீ மளமளவென பரவி, குப்பைகள் தொடர்ந்து எரிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் குப்பைமேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் கொருக்குப்பேட்டை நிலைய அலுவலர் வாசுதேவன் மற்றும் வ.உ.சி. நகர் நிலைய அலுவலர் பூசனம் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கொருக்குப்பேட்டை, வ.உ.சி. நகர், மணலி, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் களமிறங்கி தீயை கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக போராடி வருகின்றனர்.
மேலும், தீயணைப்பு வீரர்களுக்கு உதவியாக மெட்ரோ வாட்டர் லாரிகள் 10-க்கும் மேற்பட்டவை வரவழைக்கப்பட்டுள்ளன. லாரிகள் மூலம் தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு, குப்பைமேட்டில் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
குப்பைகள் குவிந்து கிடக்கும் பகுதியில் தீ ஏற்பட்டுள்ளதால், தீயை முழுமையாக அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குப்பைகளுக்குள் தீ பரவி இருப்பதால், ஒரு பகுதியில் தீ அணைக்கப்பட்டாலும் மற்றொரு பகுதியில் மீண்டும் புகை மற்றும் தீப்பிழம்புகள் எழும் நிலை காணப்படுகிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை கண்காணித்து, தண்ணீர் பீய்ச்சி அடித்து வருகின்றனர்.
குப்பைமேட்டை சுற்றியுள்ள ராஜரத்தினம் நகர், சின்ன சேக்காடு, மணலி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளிலும் கடும் புகை பரவியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, காற்றின் வேகத்திற்கு ஏற்ப கரும்புகை குடியிருப்பு பகுதிகளை நோக்கி பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் புகையால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தீ தொடர்ந்து எரிந்து வரும் நிலையில், 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் பல்வேறு தீயணைப்பு நிலையங்களின் வாகனங்கள், மெட்ரோ வாட்டர் லாரிகளின் உதவியுடன் தீயை முழுமையாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து போராடி வருகின்றனர்.
கொடுங்கையூர் குப்பைமேட்டில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு புகை பரவுவதால், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.