தீபாவளி பண்டிகைக்கு அடுத்தநாள் 9 -ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநிலத் தலைவர் அமிர்தகுமார் விடுத்திள்ள கோரிக்கை:
தமிழ்நாட்டின் சங்க வரலாற்றில் 106 ஆண்டுகளை கடந்து வெற்றியுடன் பீடுநடை போட்டுசெயல்பட்டு வருவதும்,167 துறைவாரி சங்கங்களை இணைப்புச் சங்கங்களாக கொண்டுள்ள பேரமைப்பும், தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் பொது சங்கம்தான் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் ஆகும். இச்சங்கத்தின் சார்பில் கீழ்க்காணும் கோரிக்கையை முதலமைச்சரின் கனிவான பார்வைக்கும், சாதகமான நடவடிக்கைக்காகவும் அனுப்புகின்றோம்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 08 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை கொண்டாடும் தினமான ஞாயிற்றுக்கிழமை ஏற்கனவே விடுமுறை நாளாகும். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை நோக்கி வரும் சாலைகளில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நிரம்பி வழியும் வாகனங்களோடு தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்பும் வாகனங்களும் சேர்ந்து மிகுந்த போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒரு சில வருடங்களில் வியாழக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை பண்டிகை தினமாக இருந்தால் அரசிடம் கோரிக்கை வைத்து அடுத்த நாளான வெள்ளிக்கிழமை அல்லது முதல் நாளான திங்கள்கிழமையன்று விடுமுறை கிடைக்கும். சென்னையில் பணிபுரிபவர்கள் வெளியூருக்கும். வெளியூரில் பணிபுரிபவர்ககுள் சென்னையிலும் தங்கி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். இவ்வாண்டுஞாயிற்றுக்கிழமை பண்டிகை தினம் என்பதால் ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடிவிட்டு உடன் சென்னை திரும்புவதில் சிரமம் ஏற்படும்.
மேலும் 8 -ஆம் தேதி பண்டிகை அன்றே அமாவாசை திதியும் வருவதால் அதுவும் மதியம் 12.00 மணிக்கு மேல் வருவதால் அமாவாசை தினத்தை அதன்பிறகு கொண்டாடிவிட்டு ஊருக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலையால் சிரமம் ஏற்படும்.
தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு அசைவ உணவு சமைத்து உண்பது பலவருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். இந்த வருடம் தீபாவளி பண்டிகை அன்றே அமாவாசையும் சேர்ந்து வருவதால் பண்டிகை அன்றே அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று அசைவ உணவு சமைத்து சாப்பிடுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும். திங்கட்கிழமை ஒருநாள் விடுமுறை அறிவித்தால் அன்று சொந்த ஊரில் குடும்பத்துடன் தங்கியிருந்து அசைவ உணவு சமைத்து உணவருந்திவிட்டு பிறகு ஊருக்கு திரும்புவதற்கு பேருதவியாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமையில் சிலரும், திங்கட்கிழமையில் பலரும் திரும்புவதால் ஓரளவிற்கு போக்குவரத்து பிரச்சினையும் தீரும்.
ஆகவே, தீபாவளி பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவதற்கு நவம்பர் 9 -ஆம் தேதி திங்கட்கிழமை அன்று விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் எனத்தெரிவித்துள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.