தமிழ்நாட்டில் ஆணவக் குற்றங்களைத் தடுப்பது தொடர்பான கருத்துரையை, கௌரவ கொலைகளை தடுக்க பரிந்துரைக்கும் ஆணையத்திடம் மனிதநேய மக்கள் கட்சி சமர்பித்துள்ளது.

இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:

தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான தனிச்சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைகளை வழங்க, ஓய்வு பெற்ற நீதியரசர் கே.என். பாஷா தலைமையில் சென்ற திமுக ஆட்சியில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆட்சியில் அந்த ஆணையத்தின் பணிக்காலம் நீடிக்கப்பட்டது.

இன்று அந்த ஆணையத் தலைவர் நீதியரசர் கே.என். பாஷா, உறுப்பினர்கள் வி.பழனிகுமார், எஸ்.ராமநாதன் ஆகியோரிடம் தமிழ்நாட்டில் ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்குத் தனிச்சட்டம் இயற்றுதல், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் குற்றவாளிகளை விரைந்து தண்டித்தல் தொடர்பான கருத்துரையை சமர்ப்பித்தேன்.

இந்த கருத்துரையில் ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும் விரிவான தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.

ஆணவக் குற்றங்களைப் பதிவு செய்வதற்கும், வகைப்படுத்துவதற்கும், புலனாய்வு செய்வதற்கும் ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இணையர்களுக்கான சிறப்புப் பாதுகாப்பு மையங்களை உருவாக்கி, அவை காவல்துறை மற்றும் தொடர்புடைய அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

ஆணவக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்குப் பயிற்சி பெற்ற சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை அமைத்து, சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

குடும்பம் அல்லது சமூகத்தின் அழுத்தத்தால் புகார் அளிக்க முடியாதவர்களுக்கு எளிய புகார் அளிக்கும் நடைமுறைகளையும், ரகசியத்தன்மையையும், சட்ட உதவியையும் வழங்க வேண்டும்.

சாதி அல்லது குடும்ப எதிர்ப்பின் பின்னணியில் நிகழும் சந்தேகத்திற்கிடமான மரணங்கள் குறித்து, கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் முழுமையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்துவதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.

காவல்துறை அதிகாரிகள் தங்கள் சட்டப்பூர்வக் கடமைகளை நிறைவேற்றத் தவறினால், குற்றச்சாட்டுகளைச் சுதந்திரமாக விசாரித்து, தவறு நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளைச் சட்டத்தில் சேர்க்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, மறுவாழ்வு, பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.

ஆணவக் குற்றங்கள் தொடர்பான ஆண்டு அறிக்கையை வெளியிட்டு, வழக்குகளின் நிலை, விசாரணை முடிவுகள், தண்டனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் செயல்திறனை வெளிப்படையாக மதிப்பிட வேண்டும்.

 சட்டத்தின் அமலாக்கத்தைத் தொடர்ந்து கண்காணிக்கவும், குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவும், திருத்தங்களைப் பரிந்துரைக்கவும் சுயாதீனக் கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.

உச்சநீதிமன்றம் சக்திவாணி வழக்கில் கொளரவ படுகொலைகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிகைகள் பரிந்துரைத்துள்ள நடவடிக்கைகள் புதிய சட்டத்தில் இடம் பெற வேண்டும்

ஆணவக் குற்றங்களை நியாயப்படுத்தும் சமூக மனப்பான்மையை மாற்றுவதற்காக, அரசியலமைப்பு மதிப்புகள், சாதி ஒழிப்பு, பாலின நீதி மற்றும் தனிநபர் சுதந்திரம் குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வுப் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை ஆணையத்தின் முன் வைத்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

Related

“தமிழ்நாடு செல்போன் சங்கம் சார்பில் பொன்னேரியில் ரத்ததான முகாம்!”