செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றி தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தாழ்வான பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்காமல் விரைவாக வடிந்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கூடுவாஞ்சேரி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் பல நாட்களாக மழைநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மற்றும் நிரந்தரக் கடைகளை அகற்றும் பணி நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களால் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகள் மற்றும் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து பணிகளில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகளை திடீரென முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டிய அதிகாரிகள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் இடைநிறுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மீண்டும் முழுவீச்சில் தொடங்கப்பட்டு கால்வாய்களில் அடைபட்டிருந்த கழிவுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழைநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறாகவும் மழைநீர் தேங்குவதற்குக் காரணமாகவும் அமையும் ஆக்கிரமிப்புகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.