எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த நிலையில், அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போவதாக செய்திகள் வெளியாகின.
தொடர்ந்து தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுகவை சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த 25 சட்டமன்ற உறுப்பினர்களில் 21 பேர் அதிமுக தலைமையிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினர். அதனை ஏற்று அவர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுமாறு சபாநாயகரிடம் அதிமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கைகளில் இருந்து தப்பினர். இருந்தும் இந்த எம்எல்ஏக்களில் சிலர் அதிமுக தலைமையிடம் இருந்து விலகியே செயல்பட்டு வந்தனர். கட்சி நிகழ்ச்சிகளை அவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.
இந்த நிலையில் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில், அதிமுகவின் அதிருப்தி எம்எல்ஏக்களாக கூறப்படும் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் பால்வாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் இல்லத்தில், எஸ்.பி வேலுமணி தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், இன்றைய ஆலோசனை அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.
நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சி.வி சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு தேர்தல் பணிகள் ஒதுக்கப்படாத நிலையில், இடைத்தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட சூழலில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆலோசனையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்எல்ஏக்கள், தற்போது தனியாக ஆலோசனை நடத்துவது, அதிமுகவில் மீண்டும் விரிசல் ஏற்படும் சூழலை உருவாக்கி வருகிறது?.
பூந்தமல்லி -வடபழனி மெட்ரோ சேவை தொடங்கி வைத்தற்காக மோடி விஜய்க்கு எஸ்பி வேலுமணி நன்றி தெரிவித்துள்ளர் இந்த திட்டம் அதிமுகவின் சாதனை திட்டம் என்று கூறியுள்ள எஸ்பி வேலுமணி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.