பொறியாளர் தின விழாவை முன்னிட்டு 70-க்கும் மேற்பட்ட இளம் பொறியாளர்களுக்கு தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப் பட்டது.
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாரத ரத்னா சர் எம். விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் பொறியாளர் தின விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவரான சர் எம். விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி ஆண்டுதோறும் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொறியியல் மற்றும் கட்டுமானத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் பொறியாளர்கள் கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
இளம் தலைமுறை பொறியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு 70-க்கும் மேற்பட்ட இளம் பொறியாளர்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இளம் பொறியாளர்களின் திறமையை அங்கீகரிப்பதுடன், அவர்கள் தங்கள் துறையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஊக்கமளிக்கும் என விருது பெற்றோர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷனின் 2026–2027ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர் திருஞானசம்பந்தம் செய்தியாளர்களிடம் பேசும்போது, கட்டுமானத் துறையில் பணியாற்றி வரும் பொறியாளர்களின் தொழில்முறை தேவைகள், நலன் மற்றும் உரிய அங்கீகாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கட்டுமான பொறியாளர்களுக்கென தனியாக கவுன்சில் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
பொறியியல் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் பொறியாளர்களை மத்திய, மாநில அரசுகள் முறையாகத் தேர்வு செய்து விருதுகள் வழங்கி கௌரவிப்பதுடன், அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சிவில் பொறியாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.