சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்கள் இன்று கடுமையான வேளாண் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. தென்மேற்கு பருவமழை பொய்த்ததுடன், காவிரி நீர் உரிய அளவில் தமிழகத்திற்கு கிடைக்காததால் குறுவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கடுமையான வாழ்வாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, போதிய நீரிருப்பு இல்லாத காரணத்தால் திறக்கப்படாதது டெல்டா விவசாயத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர்வழங்கல் தொடர்பாக நடுவர் மன்றமும் உச்சநீதிமன்றமும் நிர்ணயித்துள்ள அளவிற்கு கர்நாடக அரசு நீரை திறந்துவிடாததால் தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஆறு இலட்சம் ஏக்கருக்கும் அதிகமாக நடைபெற்ற குறுவை சாகுபடி, இந்த ஆண்டு கடுமையாக குறைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 1.94 இலட்சம் ஏக்கரில் நடைபெற்ற குறுவை சாகுபடி இந்த ஆண்டு சுமார் 89 ஆயிரம் ஏக்கராகக் குறைந்துள்ளது. அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் 1.91 இலட்சம் ஏக்கரில் இருந்து வெறும் 64 ஆயிரம் ஏக்கராக சாகுபடி பரப்பளவு சரிந்துள்ளது. நாகப்பட்டினம் உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் நிலத்தடி நீர் வசதிகள் குறைவாக இருப்பதால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
நிலத்தடி நீரை நம்பி சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகளும் மின்வெட்டு, குறைந்த மின்னழுத்தம், நிலத்தடி நீர்மட்ட சரிவு போன்ற காரணங்களால் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் நிலத்தை உழுதும், விதைப்பிற்காகத் தயார்படுத்தியும் இருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் முதலீடு செய்த தொகையை இழந்து வேதனையில் உள்ளனர்.
குறுவை சாகுபடி நடைபெறாததால் விவசாயத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற பொருளாதாரமே கடுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயத் தொழிலாளர்கள் வேறு வேலைகளைத் தேடி இடம்பெயர வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. விவசாயிகள் மட்டுமல்லாமல் கால்நடை வளர்ப்போரும் தீவனப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.15,000 வீதம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும் பிரதமரின் பயிர் Introduction திட்டத்தின் கீழ் “விதைப்பு/நடவு மேற்கொள்ள இயலாமை தொடர்பான இடர்” பிரிவின் அடிப்படையில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் சம்பா சாகுபடியை பாதுகாக்க சிறப்பு சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவித்து, மானிய விலையில் விதைகள், உரங்கள், டீசல் உள்ளிட்ட உள்ளீடுகளை வழங்க வேண்டும். நீண்டகாலமாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும்.
காவிரி நீர் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக கர்நாடக அரசின் மீது தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். காவிரி டெல்டா விவசாயத்தை பாதுகாப்பது என்பது விவசாயிகளை மட்டுமல்ல, தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பையும் பாதுகாப்பதாகும் என்பதை அரசு உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.