மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 137 கிலோ உயர்ரக போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் குறித்து செய்திகளை வெளியிட்டு வரும் செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
போதைப்பொருள் பறிமுதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) பொறுப்புகளில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாகச் செய்தி வெளியிடக் கூடாது என்று வலியுறுத்தி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த செய்தியாளர் திரு. பார்த்திபன் அவர்களை வாட்ஸ்அப் வாயிலாகத் தொடர்புகொண்ட தவெக நிர்வாகி ஒருவர், அனைத்து செய்தியாளர்களுக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
போதைப்பொருள் புழக்கம் தொடர்பான செய்திகளை வெளியிடுவது செய்தியாளர்களின் கடமை. அந்தக் கடமையைச் செய்வதற்காக அவர்களை மிரட்டுவதும், உண்மைகளை வெளிக்கொண்டு வருவதைத் தடுக்க முயல்வதும் ஜனநாயகத்திற்கும் ஊடகச் சுதந்திரத்திற்கும் எதிரான செயல்களாகும்.
போதைப்பொருள் ஒழிப்பு என்பது சமூகத்தின் எதிர்காலத்தைக் காக்க வேண்டிய முக்கியமான பொறுப்பாகும். இத்தகைய விவகாரங்களில் உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்குத் துணை நிற்க வேண்டுமே தவிர, அவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயற்சிப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இச்சம்பவம் தொடர்பாக நாகப்பட்டினம் செய்தியாளர்கள் சார்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
எனவே, இப்புகார் மீது மாவட்டக் காவல்துறை உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு, செய்தியாளர்களை மிரட்டியதாகக் கூறப்படும் நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களின் குரலை மிரட்டல்களால் ஒடுக்கிவிட முடியாது. உண்மையை வெளிப்படுத்தும் செய்தியாளர்களின் பாதுகாப்பையும் ஊடகச் சுதந்திரத்தையும் காப்பது அரசின் கடமையாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.