பணி நிரந்தரம் செய்யக் கோரிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் 2,500-க்கும் மேற்பட்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பணியாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் மாதம் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் அக்டோபர் 12 ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்திருந்தனர். இப்போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததோடு, போராட்டத்தைத் ஒடுக்கும் விதமாக முக்கிய நிர்வாகிகள் பலரை ஆங்காங்கே வீட்டுக் காவலில் வைத்தனர்.
தடையையும் மீறி சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே சாலையில் அமர்ந்துமறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களைப் காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்து, அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்துள்ளனர்.
பணியாளர்களின் நியாயமான கோரிக்கைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதை விடுத்து காவல்துறையை வைத்து ஒடுக்கி விடலாம் என்ற தமிழ்நாடு அரசு செயல்படுவது சரியான அணுகுமுறை அல்ல.
கடந்த இரண்டு மாதங்களாகப் பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் அறிக்கையில் தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் கோரிக்கையை வலியுறுத்திப் போராடும் ஊழியர்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவி போராட்டத்தைத் தடுப்பது கண்டனத்துக்குரியது.
வீட்டுக்காவலில் வைத்திருப்பவரையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் உடனடியாக விடுவித்து அவர்களின் நியாயமான கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.