சென்னை: சபரி வர்மன் உயிரிழப்பு சம்பவத்தையடுத்து காவல் மற்றும் சிறைக் காவலில் நிகழும் படுகொலைகளை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சபரி வர்மன் சிறையில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. காவல் மற்றும் நீதியியல் காவலின் கீழ் இருக்கும் ஒருவரின் உயிர் பறிபோகும் நிலைமை, ஜனநாயகத்தின் மனசாட்சியையே உலுக்கும் ஒரு துயர நிகழ்வாகும்.

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நிகழ்ந்த காவல் மற்றும் நீதியியல்  காவல் மரணங்கள் மக்களிடையே கடும் அதிருப்தியையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளன. குறிப்பாக, 2020 கோவிட் காலத்தில் சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த இரட்டைக் கொலை சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவம் அன்றைய ஆட்சியின் மீதான மக்களின் கோபத்தையும் நம்பிக்கையின்மையையும் அதிகரித்து, அதன் அரசியல் விளைவுகளையும் அன்றைய ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள நேரிட்டது.

மரணமடைந்த சபரி வர்மன்.

எனவே, கடந்த காலத்தின் துயரமான பாடங்களிலிருந்து அரசு கற்றுக்கொள்ள வேண்டும். காவல் மற்றும் சிறைக் காவல் மரணங்கள் மீண்டும் மீண்டும் நிகழ அனுமதிக்கப்படக் கூடாது. சபரி வர்மன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக நீதிபதி தலைமையிலான மற்றும் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உண்மைகள் முழுமையாக வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு, சட்ட உதவி மற்றும் பாதுகாப்பை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். காவல்துறை மற்றும் சிறைத்துறையில் மனித உரிமை பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தி, கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்தி, இதுபோன்ற உயிரிழப்புகள் இனி ஒருபோதும் நிகழாத வகையில் விரிவான சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும்.

மனித உயிரின் மதிப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டுவதற்காக சபரி வர்மன் உயிரிழப்பு வழக்கில் விரைவான, பாரபட்சமற்ற மற்றும் நம்பகமான நீதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”