சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மாற்றம் காண விழைந்தோருக்கு ஏமாற்றம் தந்திருப்பதாக மனிதநேய மக்கள் கட்சி விமர்சனம் செய்துள்ளது. 

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களை மாற்றி அறிவிக்கும் நடவடிக்கையில் தற்போதைய அரசு ஈடுபட்டு வருகின்றது என்பதற்கு சான்றாக இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பெயரில் திருவள்ளுவர் தினத்தில் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத் தக்கது.எனது கோரிக்கையை ஏற்று எனது தொகுதியில் உள்ள நாகூர் மற்றும் வேளாங்கண்ணி, திருக்கடையூரில் ஆன்மீக பயணிகளுக்கு ஓய்வறைகள் அமைக்கபடும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். அயலக தமிழர் முதலீடு செய்வதற்காக தனி சேவை பிரிவு தொடங்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க 10 ஒலிம்பிக் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் சிறப்பானது. ₹1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை உருவாக்குவோம் என்ற இலக்கு வரவேற்கத்தக்கது. ஆனால் பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வாக மட்டும் இருக்கக் கூடாது. அது வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வருமானம், தொழிலாளர்களின் ஊதியம், கல்வி, சுகாதாரம், சமூகநீதி மற்றும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி ஆகியவற்றில் பிரதிபலிக்க வேண்டும்.

முகமில்லா சரக்கு மற்றும் விற்பனை வரி மதிப்பீடு, பதிவுத்துறை கணினி மயமாக்கல், சுரங்கக் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் சுமார் ₹15,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இது ஒரு பெரிய கணிப்பு. இதற்கான துறைவாரியான கணக்கு, காலக்கெடு, நடைமுறைச் செயலாக்கத் திட்டம் ஆகியவை வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சமூகங்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு தனித்துவமான, மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியது அவசியம். இந்தக் கோணத்தில் நிதி நிலை அறிக்கையில்  சமூகநீதி பரிமாணத்தை காண இயலவில்லை.

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி த வெ க.  தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட பல  வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் ஏதும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. அவற்றில் சில மாதம் ₹2,500 நிதியுதவி – ‘மதிப்புமிகு மகளிர் திட்டத்தின்’ கீழ் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு உருளைகள், 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில், அவர்களின் தாய் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டுக்கு ₹15,000 நிதியுதவி, ₹20 லட்சம் வரை பிணையில்லா கல்விக் கடன். வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000; பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு ₹2,500 உதவித்தொகை, 5 லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய தொழில் உள்பயிற்சிப் பணிகள்,

₹25 லட்சம் வரை பிணையில்லா தொழில்முனைவோர் கடன், ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ₹30,000 நிதியுதவி கைத்தறிகளுக்கு 500 யூனிட் வரையிலும், விசைத்தறிகளுக்கு 1,500 யூனிட் வரையிலும் இலவச மின்சாரம் போன்ற எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. ஒரு அரசு கொண்டு வந்த திட்டத்தின் பெயரை மாற்றிவிட்டால் அந்தத் திட்டத்தை உருவாக்கிய வரலாறும், அதனால் மக்கள் பெற்ற பயன்களும் மறைந்துவிடும் என்று ஆட்சியாளர்கள் கருதுவது வேடிக்கையானது. திட்டங்களின் பெயர்களை மாற்றுவது நிர்வாக சாதனை அல்ல; மக்களின் நலனுக்கான திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்துவதே அரசின் உண்மையான சாதனை.

எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களை மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். ஏற்கனவே செயல்பட்டு வரும் திட்டங்களின் பெயர்களை மாற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, அவற்றின் பயன்களை மேலும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் காட்ட வேண்டும்.

பெயர்களை மாற்றுவதால் வரலாற்றை மாற்றிவிட முடியாது; மக்கள் நலத் திட்டங்களின் பயன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் நினைவிலிருந்தும் அவற்றை அழித்துவிட முடியாது. மொத்தத்தில் த வெ க அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மாற்றம் காண விரும்பியோருக்கு பெரும் ஏமாற்றமாகவே உள்ளது.

Related

“வெற்றி வீடு திட்டம்: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு”