சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் மு. ஹி. ஜவாஹிருல்லா ச ம உ வெளியிடும் அறிக்கை : திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்கள் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் மட்டுமே விரும்புகின்றனர். 

பல தசாப்தங்களாக எந்த நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நிலை தொடரும் என்றும், இந்த விவகாரத்தில் மதவாத மற்றும் வெறுப்பியல் சக்திகள் அரசியல் செய்ய அனுமதிக்காது என்றும் தமிழ்நாடு அரசின் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க அறிவிப்பாகும்.

திருப்பரங்குன்றம் பல்வேறு சமூகங்கள் இணைந்து வாழும் தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்க பாரம்பரியத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. அத்தகைய ஊரில் தேவையற்ற சர்ச்சைகளையும் மத உணர்வு தூண்டல்களையும் உருவாக்கி அரசியல் லாபம் தேட முயல்வது தமிழ்நாட்டின் அமைதியான சமூக சூழலை பாதிக்கும் ஆபத்தான செயலாகும். கடந்த திமுக அரசு எடுத்த அதே சமநிலையான நிலைப்பாட்டை தற்போதைய அரசும் தொடர்ந்து கடைப்பிடிப்பது, தமிழகத்தின் மதச்சார்பின்மை மரபையும் சமூக நீதி அடிப்படையிலான ஆட்சியையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

“சமூக அமைதி முதன்மை” என்ற அணுகுமுறையே தமிழ்நாட்டை பிற மாநிலங்களிலிருந்து தனித்துவப்படுத்தி வருகிறது. மத அடிப்படையிலான மோதல்களை தூண்டி அரசியல் ஆதாயம் பெற முயலும் சக்திகளுக்கு தமிழக மக்கள் தொடர்ந்து சரியான பதிலளித்து வருகின்றனர்.  தமிழ்நாட்டின் அரசியல் பண்பாடும் மக்கள் மனநிலையும் வெறுப்பை அல்ல, ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் ஆதரிப்பவையாகும்.

எனவே, கடந்த திமுக அரசின் நடைமுறைகளை தொடர்வதன் மூலம் சமூக அமைதியையும் அனைத்து தரப்பினரின் உணர்வுகளையும் மதிக்கும் தமிழக அரசின் இந்த அணுகுமுறையை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் எந்த முயற்சிக்கும் மனிதநேய மக்கள் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். 

Related

“திமுகவில் இணைந்த விசிக முன்னாள் எம்.எல்.ஏ., பனையூர் பாபு !”