சென்னை: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான வன்னியரசு தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவை நடைமுறைகள், ஆளுநர் உரை மீதான விவாதங்கள், சட்டரீதியான செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், இந்த முன்னெடுப்பை மேற்கொண்ட சபாநாயகர், அவை முன்னவர் மற்றும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். முதல் நாள் பயிற்சி சிறப்பாக நடைபெற்ற நிலையில், இரண்டாவது நாள் பயிற்சியும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற ஆணையக் கூட்டத்தில் மனைப்பட்டா தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டதாகவும், பல்வேறு துறைகளில் தலித் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டதாகவும் கூறினார்.
வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற கேள்விக்கு, “ஜூன் 18-ஆம் தேதிக்குப் பிறகு தெரியும்” என்று பதிலளித்தார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து கேட்கப்பட்டபோது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்பெண்கள்’ சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப் பட்டுள்ளதாகவும், குற்றங்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பொதுமக்கள் அச்சப்படவோ, பதற்றப்படவோ தேவையில்லை என்றும், காவல்துறை கூடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் கூறினார்.
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவல்கள் குறித்து கேட்கப்பட்டபோது, அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று வன்னியரசு தெரிவித்தார். மேலும், விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே குட்கா வழக்கு நிலுவையில் இருப்பது தொடர்பான கேள்விக்கும் அவர் கருத்து தெரிவிக்க மறுத்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.