ராயபுரம் சூரிய நாராயண மூர்த்தி சாலையில் அமைந்துள்ள ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அமைச்சர் ஷாஜகான் கூறியதாவது: 2026–27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மையின மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் 20 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. வக்ஃபு நிறுவனங்கள் மற்றும் தேவாலயங்கள் சார்பில் வணிக ரீதியாக மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மகளிரின் கல்விக் கட்டணத்தை முழுமையாக அரசே ஏற்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வேலைவாய்ப்பை பெறவும், தொழில் தொடங்கவும் உதவும் வகையில் 10,000 சிறுபான்மையினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் நலத்துறை, ராஜேந்தர் சச்சார் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இத்துறை செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஒரே ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 20 புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை. சிறுபான்மையின மக்களின் எழுச்சி, ஏற்றம் மற்றும் உயர்வுக்கு இந்தத் திட்டங்கள் நிச்சயம் துணைபுரியும்.முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்பு திரும்பப் பெறுவது வழக்கமான நடைமுறை முன்னாள் 

முதல்வர் ஸ்டாலினுக்கு முதலமைச்சராக இருந்தபோது Z+ பிரிவு பாதுகாப்பும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது Z பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் ஷாஜகான் கூறியதாவது: “பொதுவாக நாட்டின் பிரதமராக இருந்தாலும், மாநில முதலமைச்சராக இருந்தாலும், அவர்கள் பதவியில் இருக்கும்போது உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். அவர்கள் பதவியில் இல்லாதபோது, பாதுகாப்பு தேவைக்கேற்ப மாற்றப்படுவதும், குறைக்கப்படுவதும் வழக்கமான நடைமுறைதான். இதில் அரசியல் ரீதியாக கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை,” என்றார்.

வக்ஃபு வாரியத்தில் பணியாற்றி வந்த இரண்டு கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். அப்போது, அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் அவ்வப்போது மாற்றப்படுவதும், இடமாற்றம் செய்யப்படுவதும் வழக்கமான நிர்வாக நடைமுறைதான் என்று தெரிவித்தார். “இரண்டு பேர் மட்டுமல்ல. கிட்டத்தட்ட 27 க்கும் மேற்பட்ட வக்ஃபு ஆய்வாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இது வழக்கமான நடைமுறைதான்,” என்றார்.

வக்ஃபு வாரிய அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியிருப்பது குறித்த கேள்விக்கு, அவர்கள் எந்த நோக்கத்தின் அடிப்படையில் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள் என்பது குறித்து அவர்களது செயல்பாடுகளைப் பார்த்தாலே தெரியும் எனக் கூறினார்.

மேலும், பாஜகவைச் சேர்ந்த வேலூர் இப்ராஹிம் ஆதரவாக குரல் கொடுத்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, வேலூர் இப்ராஹிமின் நோக்கம் என்ன, அவர் இதுவரை எதற்காக குரல் கொடுத்து வருகிறார் என்பதை ஆய்வு செய்தாலே அதில் என்ன இருக்கிறது என்பது தெரியும் என்றார்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சி “கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது” என டி.டி.வி.தினகரன் விமர்சித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் ஷாஜகான் கூறியதாவது: “பொதுவாக எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியைப் பாராட்டிப் பேசினால்தான் அது செய்தி. விமர்சிப்பது என்பது இயற்கையான ஒன்று. அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது எப்படி ஆளுங்கட்சியைப் பாராட்டிப் பேசுவார்?” என்றார்.

மேலும், தற்போதைய ஆட்சி 100 நாட்களுக்கும் மேலாக செயல்பட்டு வருவதாகவும், லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். “லஞ்சமும் ஊழலும் இல்லாததன் காரணமாக மக்களுக்குச் செல்ல வேண்டிய திட்டங்களில் தடைபட்ட தொகைகள் அரசின் கஜானாவுக்கு திரும்பி வருகின்றன. அதன் மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன,” என்றார்.

சிறுபான்மையினர் நலத்துறையில் மட்டும் 20 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு துறைகளிலும் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

“இதுவரை இல்லாத வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் நலத்திட்டங்களை இந்த ஆட்சி நிச்சயமாக செயல்படுத்தும்,” என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வக்ஃபு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், காப்பர் கிச்சன் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் சாஜித் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related

“காவல்துறை தடையால் இடமாற்றம் செய்யப்பட்ட அனிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ”