"சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதும் நேரலை செய்யப்படவில்லை என்ற செய்தி எனக்கு தெரியாது." :பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்.
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கவிக்கோ அரங்கத்தில், தனியார் மாற்றுத்திறனாளிகள் பள்ளி சார்பில் நடைபெறும் சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி சான்றிதழ்கள் வழங்கும் விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
ஒரு குழந்தை எதையாவது சாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு குழந்தை, குழந்தையாக இருப்பதே சாதனைதான். அதற்கு மேல் என்ன சாதனை வேண்டும்? மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று குழந்தைகள் இடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு நாம் எதுவும் கற்றுத் தரத் தேவையில்லை குழந்தைகளுடன் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம்.
அன்பையும், பகிர்வையும், நேர்மையையும் குழந்தைகளிடத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம். பெரியவர்களாகிய நாம் உள்ளுக்குள் மிகுந்த கோபத்துடன் போலித்தனத்துடன் இருக்கிறோம். உள்ளுக்குள் கோபங்களை வைத்துக் கொண்டு வெளியில் நன்றாக இருப்பது போல் பாவனை செய்து வருகிறோம். ஆனால் ஒரு குழந்தை தெளிந்த நீரோடை போல் தன் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தும்.
குழந்தைகளை அவர்களது இயல்பிலேயே இருக்க விடுங்கள். புரிந்துகொள்ள்க்கூடிய தாயும், தந்தையும் அறிந்து கொள்ளக்கூடிய ஆசிரியரும் இருந்து விட்டால், அந்த குழந்தைக்கு வேறு எதுவும் தேவையில்லை, புரிதல்தான் தேவைப்படுகிறது. என் குழந்தைகளிடத்தில் நான் அப்பாவாக இல்லை, பெஸ்ட் பிரண்டாக இருந்து வருகிறேன். ஒரு குழந்தைக்கு பெற்றோர்கள் நல்ல தாயும் தந்தையுமாக இருப்பதற்கு முன்பாக பெஸ்ட் பிரண்டாக இருக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
அரசுப் பள்ளியில் 11 வயது சிறுமிக்கு மாதவிடாய் என்று கூறி வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்துள்ளனர். மாதவிடாய் என்றால் தீண்ட தகாதவர்களா? இது போன்ற பிற்போக்குத்தனமான விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இருப்பினும் அந்த விஷயம் குறித்து உடனடியாக விசாரித்து முதல் கட்ட தகவல்களை சேகரித்து தரும்படி அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எந்த இடத்திலும் எங்களது மாணவிகளுக்கு மாதவிடாய் சார்ந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித அழுத்தமும் தரக்கூடாது. அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களை சார்ந்தவர்களையும், ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த ஆட்சிகளில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் அனைத்தையும் மேம்படுத்தி அதை தொடரவும் செய்துள்ளோம். அதே சமயம் நலத்திட்டங்கள் செயல்படுத்தும் பொழுது அதில் உள்ள இடைத்தரகர்கள் களையப்பட்டு பொதுமக்களுக்கு முழுமையாக நலத்திட்டங்கள் சென்றடையும் வகையில் சரி செய்யப்பட்டு நலத்திட்டங்கள் தொடரும். பள்ளிக்கூடங்களில் அறிவியலாளர்கள், ஆளுமைகள், கல்வியாளர்களின் திருவுருவபடத்தை மாட்டவேண்டும். எந்தக் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் கல்வி நிலையங்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படத்தை மாட்டவேண்டாம். முதல்வரும் அதையே விரும்புவார்.
கழிப்பறை மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் தான் பள்ளிக்கூடங்களுக்கு முக்கிய தேவை. ஆகையால் பள்ளிக்கூடங்களில் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களை வைத்து கழிப்பறைகளை சுத்தம் செய்வது போன்ற செயல்கள் இன்னும் சென்னையின் புறநகர் மாவட்டங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் நடைபெறுவதாக செய்திகள் வருகிறது. இது தொடர்பாக புகார்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட கல்வியை நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கான கட்டணங்களை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சில பள்ளிகளில் மாணவர்களின் கல்விக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் வெளிப்படையுடன் செயல்பட வேண்டும்.
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வுகள் அதிகமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது விரைவில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படும்.குழந்தைகளை கஷ்டப்படுத்தக்கூடிய எந்த ஒரு தேர்வு முறைகளும் வேண்டாம் என்றுதான் நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். நீட் தேர்வுக்கு எதிராக சட்டரீதியான முன்னெடுப்புகளை செய்து கொண்டுதான் இருக்கிறோம்.
சட்டப்பேரவை நேரலை போய்க் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் நானும் சட்டப்பேரவையில் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் பேரவைக்கு இடையேநான் வெளியே வரும்பொழுதுதான் தெரிந்தது நேரலை செய்யவில்லை என்று. ஜனநாயகநாட்டில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்ய வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவருடன் பேசி மிச்சமிருக்கக்கூடிய நாட்களில் நேரலை தொடரும்.
சட்டப்பேரவை நிகழ்வுகளை குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் பார்க்கிறார்கள். பேரவையில் ஆபாசமான வார்த்தைகளோ சபைக்கு அனுமதி இல்லாத விஷயங்களையோ பேசும் பொழுது நேரலை செய்வது தடுக்கப்படலாம். ஆனால் பேரவை நிகழ்வுகள் சுமூகமாகத்தான் சென்றது. துறை சார்ந்த அதிகாரியுடன் கலந்து பேசி இனிவரும் நாட்களில் நேரலை தொடரும்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.