சென்னை தண்டையார்பேட்டை ஐஓசி அருகே உள்ள கால்வாய் பகுதி, ரயில்வே கேட், எம்.ஜி.ஆர். நகர், எழில் நகர் மற்றும் குப்பைமேடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில், கால்வாய்களில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நிதித்துறை அமைச்சருமான மரிய வில்சன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஐஏஎஸ் அதிகாரி கண்ணன், மண்டல அலுவலர் ராஜ்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஆர்.கே. நகர் பகுதியில் தண்ணீர் தேங்கக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நேற்று இரவு நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி, மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
நேதாஜி நகர் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய் பகுதிகளில் ஆகாயத் தாமரைகள் மற்றும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்குள் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். கால்வாய் பகுதிகளைத் தூய்மைப்படுத்தி, குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் தடுப்புச் சுவர் அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கூடுதலாக இரண்டு வாகனங்களைப் பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தியுள்ளோம். ஆகாயத் தாமரைகளை முழுமையாக அகற்றி, கால்வாய்களைச் சீரமைப்பதன் மூலம் மழைநீர் தடையின்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், கால்வாய்களைத் தொடர்ந்து பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதற்காகத் தேவையான இயந்திரங்களை வாங்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளை முறையாகப் பராமரிப்பதற்காக, அந்தப் பகுதிகளை எங்கள் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கக் கோரி ரயில்வே நிர்வாகத்துக்குக் கடிதம் அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம்.
மழைக்காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள ஏழு வார்டுகளிலும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தன்னார்வலர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மின்சாரம், கழிவுநீர் மற்றும் குடிநீர் உள்ளிட்ட துறைகள் தொடர்பான புகார்களை ஒரே இடத்தில் பெற்றுத் தீர்வு காணும் வகையில், மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். பொதுமக்களின் புகார்களுக்கு விரைவாகப் பதிலளிக்கவும், சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கவும் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
மழைக்காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றன” என அமைச்சர் தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.