சென்னை: மேம்படுத்தப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, ஆலோசனை சார்ந்த மருத்துவப் பயனாளர் சேவைகள் மற்றும் தொழில்நுட்பத்தை நிர்வகிக்கும் சமூகப் பொறுப்புத் திட்டங்களின் தொடக்க விழா சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மருத்துவம், மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கோ.அருண்ராஜ் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பு: தமிழக அரசின் புதிய 'நலம் ஏஐ' வாட்ஸ்அப் சேவை 22 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்தார். 96192 22999 என்ற வாட்ஸ்அப் எண்ணின் மூலம் புற நோயாளிகள் மருத்துவமனைக்கு நேரில் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே மருத்துவர்களிடம் தேதி, நேரம் ஆகியவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார். இதற்கு ஆதார் உள்ளிட்ட எந்த ஆவணமும் அவசியமில்லை என்றும், தற்போது சென்னையில் இந்த வசதி செயல்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
கிராமப்புற மக்களும் எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த சேவையை பயன்படுத்துவது கட்டாயமல்ல; நோயாளிகள் வழக்கம்போல் நேரடியாக மருத்துவமனைக்கும் செல்லலாம் என்றார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு இந்த சேவையை உருவாக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தனலட்சுமி சீனிவாசன், சீனிவாசன் மற்றும் சென் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ் (NOC) தொடர்பாக அரசு சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
2020-ஆம் ஆண்டு இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற NOC வழங்கப்பட்டதாகவும், சென் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட NOC-வை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கற்பகவிநாயக மருத்துவக் கல்லூரிக்கும் யுஜிசி விதிப்படி 60 நாட்களுக்குள் மாநில அரசு பதில் அளிக்காததால் NOC கிடைத்ததாக தெரிவித்த அவர், இதுபோன்ற நடவடிக்கைகள் இடஒதுக்கீடு மற்றும் கட்டண நிர்ணயத்தை பாதிக்கும் என்பதால், ஒன்றிய அரசுடனும் மத்திய கல்வி அமைச்சருடனும் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாநில அரசின் அனுமதியின்றி நேரடியாக யுஜிசியிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றதாக கூறப்படும் டீம்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார். கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவர்கள் மீது நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவர்களிடம் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்; ஐந்தாவது ஆண்டுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். விதிமீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் 104 என்ற உதவி எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும், விரைவில் 751 மருத்துவர்கள் மற்றும் 1,353 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் நியமிக்கப்பட உள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவையை வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.