சென்னை திருவொற்றியூர்: திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தின் முப்பெரும் விழாவில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு வெற்றி கோப்பையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கினார்.
திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கம் முப்பெரும் விழா திருவொற்றியூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் சங்க தலைவர் எம். அருள்மொழி தலைமை வகித்தார். செயலாளர் யு.எஸ். குறளரசன் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கலந்து கொண்டார்.
அப்போது நீதிபதி சுவாமிநாதன் பேசியது,
நீதிமன்றங்களில் தேங்கும் அதிக வழக்குகளை விரைவில் தீர்ப்பதற்காக நீதிபதிகள் இரவு வரை பணியாற்றியினாலும் அதற்கு ஏற்றார் போல வழக்கறிஞர்களும் பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது. அவர்களுக்கும் மாலை நேரத்தில் அடுத்த நாள் வழக்குகள் குறித்து விவாத குறிப்புகளை தயார் செய்ய வேண்டும். குடும்பத்தின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். எனவே இரு தரப்பு வழக்கறிஞர்களின் ஒப்புதலோடு மட்டுமே கூடுதல் நேரங்கள் நீதிபதிகள் பணியாற்ற வேண்டும்.
பல்வேறு விமர்சனத்திற்கு உரிய தீர்ப்புகளை நான் வழங்கி இருந்தாலும் எவ்வித சலனமும் இன்றி சற்று மாறுபட்ட கோணத்தில் நீதிபதியாக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். சிக்கலான வழக்குகளில் சிறந்த தீர்ப்பை அளிக்க வேண்டும் எனில் நீதிபதிகளுக்கு உதவிடும் வகையில் வழக்கறிஞர்கள் நன்கு கற்றறிந்து குறிப்புகளை தந்து உதவ வேண்டும். ஒரு தீர்ப்பை அளிக்க பல்வேறு கோணங்களில் நீதிபதிகள் சிந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே நீதிபதிகளுக்கு உதவிடும் நோக்கத்தில் வழக்கறிஞர்கள் பல்வேறு நீதிமன்றங்களின் கடந்த கால தீர்ப்புகளை மேற்கோள் காட்டும் வகையில் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
சமூகத்தில் மற்றவர்களை காட்டிலும் வழக்கறிஞர்களுக்கு சமூக அக்கறை கண்டிப்பாக இருக்க வேண்டும். அண்மையில் பெரியபாளையம் அருகே அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க இந்த வழக்கறிஞர் சங்கங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏழை எளிய குடும்பங்களை சார்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான நிவாரணத்தை பெற்றுத்தர முடியும்.
மேலும் வழக்கறிஞர்கள் தங்களது வாழ்க்கையை மிகவும் தூய்மையாகவும், எளிமையாகவும் அமைத்துக் கொள்ள வேண்டும். புகை பிடித்தல், மது பழக்கம், சூதாட்டம் உள்ளிட்டவைகளில் நாட்டம் இருக்கக் கூடாது. இதனால் வழக்கறிஞர்களும் அவரது குடும்பத்தினரும் நலமான வாழ்வை தொடர முடியும் அதற்கு இளம் வழக்கறிஞர்கள் உறுதி ஏற்க வேண்டும். அதற்கு மூத்த வழக்கறிஞர்கள் வழி காட்ட வேண்டும் என்றார் நீதிபதி சுவாமிநாதன். பின்னர் பெரியபாளையத்தில் அண்மையில் நடைபெற்ற அமோனியா வாயு கசிவு சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நீதிபதி ஜூலியட் புஷ்பாவிடம் மனு ஒன்றை நீதிபதி சுவாமிநாதன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட நீதிபதி ஜே.ஜூலியட் புஷ்பா, தலைமை நீதித்துறை நடுவர் கே. நம்பிராஜன், திருவொற்றியூர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பிரபா தாமஸ், கே கார்த்திக், ஆர். ரேவந்த், தாம்பரம் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.வேல்ராஜ், திருவொற்றியூர் எம்எல்ஏ என். செந்தில்குமார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர். சி.பால் கனகராஜ், சங்க நிர்வாகிகள் எஸ் பால யோகேஸ்வரன், வெற்றிவேல் பாண்டியன், சண்முகப்பிரியா, கே நவீன் குமார், கே.ஷோபனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.