சென்னை: ஆளுநருக்கு நேரடி அதிகாரம்-பாஜக தலைவர் கூறுவது அரசியலமைப்புக்கு எதிரான தவறான விளக்கம் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,

தமிழக பா.ஜ.க. தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், “மாநில அரசின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடும் அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ளது” என்று கூறியிருப்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைச் சித்தாந்தங்களையே தலைகீழாக மாற்றும் வகையிலான தவறான விளக்கமாகும்.

பாஜக ஆளாத  ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக செய்து வரும் செயலின் பிரதிபலிப்பாக அவரது கருத்து அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் 163வது மற்றும் 164வது பிரிவுகள், மாநிலத்தின் உண்மையான நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையிடமே இருப்பதை தெளிவாகக் கூறுகின்றன. 

ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத் தலைவர் மட்டுமே; அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் உதவியின் அடிப்படையில்தான் அவர் செயல்பட வேண்டும். அரசியலமைப்பில் குறிப்பாக வழங்கப்பட்டுள்ள மிகச் சில விதிவிலக்கான சூழல்களைத் தவிர, ஆளுநருக்கு தனிச்சுய விருப்பப்படி மாநில நிர்வாகத்தை நடத்தவோ, அன்றாட நிர்வாகத்தில் தலையிடவோ எந்த அதிகாரமும் இல்லை.

இந்திய அரசியலமைப்பின் 154வது பிரிவு, மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் இருப்பதாகக் கூறினாலும், அந்த அதிகாரம் அரசியலமைப்பின் பிற விதிகளுக்கு உட்பட்டதாகும். அதாவது, அந்த அதிகாரம் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில்தான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதை மறைத்து, ஆளுநருக்கு நேரடி நிர்வாக அதிகாரம் இருப்பதாகப் பேசுவது மக்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சியாகும்.

உச்சநீதிமன்றம் ஷாம்ஷேர் சிங் எதிர் பஞ்சாப் மாநிலம் (1974) வழக்கில், ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில்தான் செயல்பட வேண்டும் என்றும், தனித்து நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது என்றும் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல் நபாம் ரெபியா (2016) உள்ளிட்ட தீர்ப்புகளிலும், ஆளுநரின் விருப்ப அதிகாரம் மிகவும் வரையறுக்கப்பட்டதாகவே இருப்பதாக உச்சநீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் தமிழ்நாடு அரசு எதிர் ஆளுநர் ஆர். என். ரவி தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும், ஆளுநர் அரசியலமைப்புச் சட்ட வரம்புகளை மீற முடியாது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முடக்கவோ தாமதப்படுத்தவோ கூடாது என்று கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம், மாநில சுயாட்சிக் கொள்கை மற்றும் மக்களாட்சி ஆகியவற்றின் அடிப்படையே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே மாநிலத்தை நிர்வகிக்க வேண்டும் என்பதாகும். ஆளுநர் பதவி என்பது தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகத்திற்கு மாற்றான அதிகார மையம் அல்ல; அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பிற்குள் செயல்படும் அரசியல் சார்பற்ற அரசியலமைப்புப் பதவியாகும்.

எனவே, ஆளுநருக்கு மாநில அரசின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடும் அதிகாரம் இருப்பதாகக் கூறுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும், இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும் நேர்மாறானது. 

அரசியலமைப்பை மதிப்பதாகக் கூறும் பா.ஜ.க., முதலில் அரசியலமைப்பின் உண்மையான பொருளை அறிந்து பேச வேண்டும். அரசியலமைப்பை அரசியல் ஆதாயத்திற்காக  திரித்துப் பேசுவது ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சிக்கும் ஆபத்தான முன்னுதாரணமாகும்.

ஆர் என் ரவியின் பாதையில் ஆளுநர் அர்லேகரும் பயணித்தால் தமிழ்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பலைகளை சந்திக்க நேரிடும் என்பதை உணர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 


 

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”