சென்னை: உமீத் இணையதளத்தில் விடுப்பட்ட வக்ப் சொத்துக்களை பதிவேற்றம் செய்ய தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் மு. ஹி. ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உமீத் இணையதளத்தில் நாட்டில் உள்ள அனைத்து வக்ப் சொத்துக்களின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் திருத்தச் சட்டத்தின் விதியாகும்.
அதன்படி நாட்டில் உள்ள அனைத்து வக்ப் சொத்துக்களையும் விரைந்து உமீத் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த பதிவிற்கான காலக்கெடு 6 மாதங்களுக்கு முன்பே முடிவடைந்தபோது, அன்றைய திமுக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக வக்ப் தீர்ப்பாயத்தின் மூலம் 6 மாதகாலம் காலகெடு நீடிக்கப்பட்டு வக்ப் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வந்தது.
உமீத் இணையதளத்தில் வக்ப் சொத்தை பதிவு செய்பவர் மேக்கர் (Maker) என்றும் அதனை சரிபார்பவர் செக்கர் (Checker) என்றும் இறுதியாக ஒப்புதல் அளிப்பவர் அப்ரூவர் (Approver ) என்றும் உள்ளது. உமீத் இணையத்தில் வக்ப் சொத்துக்களை பதிவு செய்பவர் பெரும்பாலுமாக முத்தவல்லியாக இருக்கும் நிலையில் அதனை சரிபார்ப்பவர் வக்ப் வாரிய ஊழியர்களாக உள்ளனர். இதற்கு ஒப்புதல் அளிப்பவர் தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலராக உள்ளார்.
ஆறு மாதங்களாக முத்தவல்லிகளால் பதிவு செய்யப்பட்ட வக்ப் ஆவணங்களை அவ்வப்போதே சரிபார்த்து ஒப்புதல் அளிக்காமல், கடைசி 5 நாட்களில் வக்ப் வாரிய முதன்மை செயல் அலுவலர் அவர்கள் ஆவணங்களை சரிபார்த்து இதுவரை சுமார் 3929 வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய முடியாது என்று நிராகரித்துள்ளார் காலக்கெடு முடிவடைய ஒரிரு நாட்கள் இருக்கும்போது வக்ப் சொத்துக்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என நிராகரிக்கப்பட்டதால் வக்ப் நிர்வாகத்தினர் தேவையான ஆவணகளை கொண்டு மீண்டும் பதிவேற்றம் செய்வதற்கான காலம் முடிவடைந்துள்ளது.
அதேபோல், தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான வக்ப் சொத்துக்கள் இருக்கும்போது வெறும் 15000 வக்ப் சொத்துக்கள் உமீத் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதில் 8015 வக்ப் சொத்துக்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்ப்பட்டுள்ளது என்பது வேதனைக்குறியது. தமிழ்நாட்டில் மீதமுள்ள வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய வக்ப் வாரியம் சம்மத்தப்பட்ட வக்ப் நிர்வாகத்திற்கு சரியான முறையில் அறிவுறுத்தல்களை வழங்காததே இதற்கு காரணம்.
இறைத்திருப்திக்காக இஸ்லாமிய முன்னோர்களால் தனமாக வழங்கப்பட்ட சொத்துக்களை பாதுக்காக்கவும், பராமரிக்கவும் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு ஒரு முழுநேர முதன்மை செயல் அலுவலர் இல்லாததே வக்ப் வாரிய பணிகளில் ஏற்படும் மெத்தனத்திற்கும், அலட்சியத்திற்கும் காரணம்.
எனவே, வக்ப் சொத்துக்களை பாதுக்காக்க, உமீத் இணையதளத்தில் பதிவு செய்வதற்காக காலக்கெடுவை நீடிக்க நீதிமன்றம் மூலம் ஆணை பெறவும், உமீத் இணையதளத்தில் இதுவரை பதிவு செய்யாமல் உள்ள வக்ப் சொத்துக்களை சம்மந்தப்பட்ட வக்ப் நிர்வாகத்தினரை அறிவுறுத்தி அவர்களுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்கி விரைந்து பதிவு செய்ய வேண்டும் எனவும், முக்கியமாக தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு முழுநேர முதன்மை செயல் அலுவலரை விரைந்து நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.