மயிலாடுதுறை கடற்பகுதியில் 5 ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியில், CRZ-IVA (கடலோர ஒழுங்குமுறை மண்டலம் – IV A (கடல் நீர்ப்பரப்பு)  எல்லைக்குள் 5 புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஒரு  தனியார் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பது கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

காவிரி படுகை பகுதிகளில் விவசாயமும், கடலோரப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இந்த நிலையில், கடலுக்குள் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டம் கடல்வாழ் உயிரினங்கள், கடல் சுற்றுச்சூழல் மற்றும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் மீது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகும். கடல் வளங்களை அழித்து, மீனவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ்நாடு அனுமதிக்கக் கூடாது.*

தற்போது இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பம் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. திட்ட அமைவிடம் CRZ-IVA எல்லைக்குள் வருவதால், தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரையும் முக்கியமானதாகும்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், கடல் வளங்களையும் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசின் அழுத்தங்களுக்கோ, தனியார் நிறுவனங்களின் நலன்களுக்கோ அடிபணிந்து தமிழகத்தின் கடலோரப் பாதுகாப்பை ஒருபோதும் சமரசம் செய்யக் கூடாது.

தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், இத்திட்டத்திற்கான கடலோர ஒழுங்குமுறை மண்டலம் ஒப்புதலை எந்தவிதத்திலும் வழங்கக் கூடாது. இத்திட்டத்தால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார அச்சுறுத்தல்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுவதுடன், கடலோர மீனவ மக்களின் கருத்துகளும் உரிய முறையில் கேட்கப்பட வேண்டும்.

மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா கடலோரப் பகுதிகளை ஹைட்ரோகார்பன் திட்டங்களின் சோதனைக் களமாக மாற்றுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டின் கடல் வளங்கள் விற்பனைக்கல்ல; மீனவர்களின் வாழ்வாதாரம் பேரம் பேசுவதற்கல்ல” என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் அரசு செயல்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் உரிமைகளையும், கடலோர மக்களின் வாழ்வாதார உரிமைகளையும் பாதுகாப்பதில் அரசு எந்த நிலையிலும் பின்வாங்கக் கூடாது என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.


 

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”