சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொது குழு கூட்டம், சென்னையில் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக் குழுவில் 500 கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளார்கள். அதில் 483 பேர் பங்கேற்றனர். பொதுக்குழுவில் திமுக கூட்டணியிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விலகுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு தொடர்பாக தேசியத் தலைவர் காதர்மொய்தீன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விபரம்: இது மிக முக்கியமான தருணத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழு.இந்த பொதுக்குழுவில் 14 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம். அதில் மிக முக்கியமான தீர்மானம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்த ஆண்டு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் கேரளாவில் 28 தொகுதிகளில் போட்டியிட்டு 22 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் 5 அமைச்சர்களை பெற்று உள்ளோம்.
கேரளாவில் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து வெற்றி பெறும் போது எல்லாம் 5 அமைச்சர்களை பெறுவோம். மேற்கு வங்கத்தில் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக ஆதரவோடு, கூட்டணி ஆதரவோடு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம்.
நீண்ட காலத்திற்கு பிறகு தமிழகத்தில் இரண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். 60 ஆண்டுகளுக்கு மேல் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளது. தொடர்ந்து திமுக கூட்டணியில் தான் வெற்றி பெற்றுள்ளோம். இது நீண்ட கால வரலாறு. இந்த தேர்தல் முடிவில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையோடு தான் தேர்தலில் ஈடுபட்டு உழைத்து பாடுபட்டு முழுமையாக நம்பினோம். நடக்கும் என்று நம்பி செயல்பட்டோம்.
ஆனால் கடவுள் நாட்டம் வேறாக இருந்து அனைத்து இடங்களில் விசில் ஊதப்பட்டு ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதியில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் உதவியுடன் ஆட்சி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இது பற்றி திமுக தலைவரிடம் கலந்து பேசினோம். பல்வேறு கருத்துகளை பரிமாறினோம்.
இறுதியாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை நிபந்தனை இல்லாமல் ஆட்சி அமைய ஆதரவு கொடுத்தோம். நாங்கள் ஏன் ஆதரவு கொடுத்தோம் அதற்கு என்ன அவசியம் வந்தது என்று திமுக தலைவரிடம் சொன்னோம். ஜனாதிபதி ஆட்சி வந்தால் மறைமுக பாஜக ஆட்சி வர நாங்கள் காரணமாகிவிட கூடாது என்று. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த போது எவ்வளவு வேதனை பட்டார்கள் என்று அறிந்து எங்கள் சமுதாய மக்கள் விருப்பத்தோடு ஆதரவு அளித்தோம்.
நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்திருந்தாலும், பெரும் மனது செய்து எங்களை தனியாக அழைத்து நேரடியாக அழைத்து கடிதம் கொடுத்து சொல்லப்பட்டது. அகில இந்திய தலைமை கேரளாவில் உள்ளது. அவர்களை கலந்து கொண்டு அவர்கள் ஒப்புதல் பெற்று அமைச்சரவையில் ஈடுபட ஆலோசனை கொடுத்த பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷாஜகான் அவர்களை மந்திரி சபையில் இடம்பெற அறிவித்தோம்.
தமிழக வெற்றி கழக அரசு தமிழகத்தை ஆண்டு கொண்டுள்ளது. இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள் அதன் படி நல்லாட்சி தொடர வேண்டும். தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற வைத்ததற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் அவரின் கட்சிக்கும் நன்றி இந்த நல்லாட்சி தொடர வேண்டும்.
இஸ்லாமிய மார்க்கத்தின் 5 கடமை உள்ளது. 6 ஆவது கடமை ஜனநாயகத்தில் ஓட்டு போட வேண்டும் அதை நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னேன், திமுகவுக்கு ஓட்டு போட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நான் சொல்லாததை கேட்டால் எப்படி என கோபத்துடன் செய்தியாளரை ஆவேசத்துடன் எதிர்த்து கேள்வி கேட்டார். இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பது தமிழ் மக்கள் விருப்பம் எங்கள் விருப்பமும் அது தான்.
இந்த ஆட்சி தொடர்வதற்கு எல்லா வகையில் நாங்கள் உடன் இருப்போம். தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு பெயர் சூட்டப்படவில்லை. பெயர் சூட்டப்படாத கூட்டணியில் உள்ளோம். முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுந்தால் பேசுவார். பெண்களுக்கு எதிரான பிரச்சினையை இன்று நேற்றா நடக்கிறது. சிங்க பெண்கள் படையை உருவாக்கி இருக்கிறார்கள்.
நேற்று, இன்று, நாளை திமுக கூட்டணியில் இருப்போம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டது குறித்த கேள்விக்கு, திமுக கூட்டணியில் இருக்கும் போது சொன்னேன். இப்போது தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இருக்கிறோம், அதில் இன்றும் இருக்கிறோம் நாளையும் இருக்கிறோம்.
சோபா மாடல் ஆட்சி என்ற விமர்சனம் பற்றிய கேள்விக்கு, நாங்கள் சோபா வாங்கவில்லை சார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு எந்த முதலமைச்சரும் வந்தது இல்லை. முதல்வர் 4 முறை வருகிறேன் என்று சொன்ன போது வேண்டாம் இது சிறிய தெரு என்று சொன்னேன். வாடகை சோபா எல்லாம் அவர் வருகிறார் என்று வாங்கி போட்டோம் அதை மறுநாள் காலையில் எடுத்து சென்று விட்டார்கள். நாங்கள் வேறு எந்த சோபாவும் வாங்கவில்லை.
மேகதாது அணை கட்டி விட்டால் நமக்கு வரும் காவிரி நீர் வராமல் கூட போகலாம் அதனால் தான் எல்லா கட்சி சார்பில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. அந்த தீர்மானம் அடிப்படையில் அனைத்து கட்சி சார்பிலும் பிரதமரை சந்தித்து வற்புறுத்துவோம். என்று தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.